உங்கள் குழந்தைகள் நலமா - பாகம் 9
குழந்தைகளுக்கான உடற்பயிற்சிகள்
குழந்தைகளுக்கான உடற்பயிற்சி என்றதும், அது ஏதோ நமக்குத் தெரியாத ஒன்று என்றும், வேறு யாரோ ஒருவர் வந்துதான் அதை அவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்றும் பலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், குழந்தைகளுக்கான உடற்பயிற்சி என்பது குழந்தைகளை அவர்கள் விரும்பும்படியாகவும், பாதுகாப்பாகவும் விளையாட அனுமதித்தல் ஆகும். ஆனால் இன்றைய சூழலில் பாதுகாப்பு என்பது தலைகீழ் அர்த்தமாய் மாறி “வீடியோ கேமில்” வந்து நிற்கிறது. முதலில் குழந்தைகள், அவர்களது உடற்பயிற்சி ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். [அதன் முன், இப்போதெல்லாம் பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகள் நடை பெறுகின்றனவா என்பதை அறிய வேண்டும்]
உடற்பயிற்சியின் வகைகள்:
பொதுவாக உடற்பயிற்சிகளை
1. நுரையீரல், இதயத்துக்கான உடற்பயிற்சிகள் (Aerobic, Cardio Exercises)
2. உடல் புறத்தசைகளுக்கான பயிற்சிகள் (Anaerobic Muscle Fitness & building up) என பிரிக்கலாம்.
குழந்தைகளுக்கான பயிற்சி என்பது, குழந்தைகளின் வயதுக்கு உட்பட்டு, திறனுக்கு உட்பட்டு இருத்தல் அவசியம்.
I. மூட்டு அசைவுகளுக்கான பயிற்சி:
உடலின் ஒவ்வொரு மூட்டும் குறிப்பிட்ட கோணம் வரை அசையக் கூடியது. எடுத்துக்காட்டாக தோள்பட்டை மூட்டு 360 டிகிரி அசையக்கூடியது. அதே போல் ஒவ்வொரு மூட்டும் தனக்கான பிரத்யேக சுற்றும் தன்மையையும், அசையும் தன்மையையும் கொண்டது. எல்லா மூட்டுகளும் அதற்கே உரித்தான முழு கோணத்தையும் அடைகின்ற வகையில் பயிற்சிகள் அமைய வேண்டும். இத்தகைய பயிற்சிகள் மூட்டின் அசையும் தன்மையை உறுதி செய்வதுடன் மூட்டைச் சுற்றியுள்ள தசைகளின் நீட்சித்தன்மை, சுருங்கி விரியும் தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்கிறது.
II. தசைகளை வலுவேற்றும் பயிற்சி:
இந்த வலுவேற்றும் பயிற்சியும் எல்லா வயதுக்கு குழந்தைகளுக்கும் பொதுவானதாய் இருப்பதில்லை. தசை வலுவேற்றும் பயிற்சியின் முக்கிய அங்கம், எடை தூக்கும் பயிற்சியாகும். குழந்தைகள் எந்த அளவு எடை தூக்க வேண்டும், எத்தனைமுறை தூக்க வேண்டும் என்பதை இயன்முறை மருத்துவமே முடிவு செய்ய முடியும். ஏனெனில் எலும்பின் வளர்ச்சியைப் (Epiphyseal) பொருத்தும் தசைகளின் தன்மை மாறுபடுகிறது. குழந்தைகளின் வயதை பொருத்தும் எடை தூக்கும் பயிற்சிகள் மாறும். குழந்தைகளுக்கு உடற்பயிற்சி கொடுக்கிறோம் என்று நாமாக அவர்களை எடை தூக்க வைப்பது அவர்களது இயற்கையான உடல் வளர்ச்சியை பாதிக்கும்.
III. இதய நுரையீரலுக்கான பயிற்சிகள்:
நடனமாடுதல், நீச்சல், ஓடுதல், வேகமாக நடத்தல் ஆகியவை இதய நுரையீரல் பயிற்சிகளுக்கு அவசியமாகின்றன. இதுபோன்ற பயிற்சிகளை பொறுத்தமட்டில் சிறிது சிறிதாக பயிற்சியின் அளவை அதிகரிப்பது நல்லது. முதல் நாளே அதிக தூரம் ஓடச் செய்வது, அதிக நேரம் நீச்சல் அடிக்கச் செய்வது தசைகளை சோர்வடையச் செய்துவிடும்.
தனியாகப் பயிற்சி செய்யாமல், குழுக்களாக பயிற்சி செய்யும் போது, குழந்தைகளின் நுண்திறன் வளரும். எடுத்துக்காட்டாக 10 குழந்தைகளை ஓடச்செய்தால், ஒருவர் மேல் ஒருவர் இடிக்காமல் அடுத்தவர்களை இடையூறு செய்யாமல் எப்படி ஓடுவது என்று குழந்தைகளின் மூளையும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படத்தொடங்கும். குழந்தைகளின் சமச்சீர் செயல்பாடும் (Balanced Activity) அதிகரிக்கும்.
காலச்சூழல் காரணமாக ஒரு வீட்டுக்கு ஒரு குழந்தை என்று ஆகிப்போனது. உறவினர்களோடு சேர்ந்து வகிப்பது குறைந்துவிட்டது. எனவே விளையாடும் திறனும், விட்டுக்கொடுக்கும் அறமும் தானாகவே பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பில்லை. அனைத்தையும் நாம் தான் கற்பிக்க வேண்டும்.
இந்த உடற்பயிற்சி பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டுகளை நாம் சேர்க்கவில்லை. ஏனெனில் விளையாட்டு வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டது. ஆனால் உடற்பயிற்சி, உடல் நலத்தை முதன்மையாகக் கொண்டது. விளையாட்டில் வெற்றி பெற உடற்பயிற்சியே முதல்படி.