உடலில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்.
ஒவ்வாமை என்பதை அலர்ஜி என்று நாம் குறிப்பிடுகிறோம். ஒவ்வாமை என்றால் ஒத்துக்கொள்ளாமை. இதுவரை உபயோகித்த பொருட்களினால் உண்டாவது தான் ஒவ்வாமை. எந்த இடத்தில் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைப் பொறுத்துதான் அதற்கான காரணங்கள் குறித்த முடிவுக்கு வர முடியும். தோலில், மூக்கில், வாயில் என்று உடலின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வாமை ஏற்படும். சுறு சுறு என்று இழுக்கும் பேஸ்ட்களைப் பயன்படுத்துவதால் நாக்கில் ஒவ்வாமை ஏற்படுகிறது. நாக்கு என்பது மென்மையான ஒரு பகுதி.
உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் போனால் வாயில் ஒவ்வாமை ஏற்படும். உணவினால் உடல் முழுவதும் அலர்ஜி ஏற்படும் சூழ்நிலையும் உண்டு. அசைவ உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பால் பொருட்களால் கூட அலர்ஜி ஏற்படலாம். நாம் அணியும் உடையால் கூட ஒவ்வாமை ஏற்படும். வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு அவற்றினால் ஒவ்வாமை ஏற்படலாம். கெமிக்கல்கள் மற்றும் தூசியினால் ஒவ்வாமை ஏற்படலாம். மாத்திரை மருந்துகளினாலும் ஒவ்வாமை ஏற்படும். தும்மல் வருவது, தோலில் அரிப்பு ஏற்படுவது, மூக்கிலிருந்து நீர் வருவது, ஆஸ்துமா என்று ஒவ்வாமைக்கு பல்வேறு அறிகுறிகள் உண்டு.