பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்து பேராசிரியர் ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்.
சிறுநீர் கசிவு பிரச்சனை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை குறித்து வெளியே பேசுவதற்கே அவர்கள் தயங்குவார்கள். சிலரால் சிறுநீரை சில மணி நேரம் கூட அடக்க முடியும். சிலரால் அவ்வாறு அடக்க முடியாது. அவர்களை அறியாமல் அவர்களுக்கு சிறுநீர் வெளியேறிவிடும். இது அவர்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும். அவசரமாக சிறுநீர் வெளியேறுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மருந்து மாத்திரைகள் மூலமே இதை குணப்படுத்த நாங்கள் முயற்சிப்போம்.
முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நாளாக இந்தப் பிரச்சனை இருக்கிறது என்பதை ஆராய்வோம். அவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று பார்ப்போம். சிறுநீரை ஒருவர் சரியாக வெளியேற்றவில்லை என்றாலும், சிறுநீர்ப்பை பிரச்சனை இருந்தாலும், நரம்பு பிரச்சனைகள் இருந்தாலும் சிறுநீர் கசிவு ஏற்படும். அல்ட்ரா ஸ்கேன் மூலம் அனைத்தையும் நாம் அறிய முடியும். அவசரமாக சிறுநீர் வெளியேறுவது என்பது ஒரு அறிகுறி தான். இந்தப் பிரச்சனை சரியாக நிறைய மருந்து மாத்திரைகள் இருக்கின்றன.
மருந்து மாத்திரைகளுக்கு செல்வதற்கு முன்னால் உடல் பருமனைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். உடல் பருமனைக் குறைத்தாலே பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும். வீட்டிலிருந்தே செய்ய முடிந்த பயிற்சிகளின் மூலமாகவும் இதைச் சரி செய்யலாம். பிசியோதெரபி மூலமாகவும் இதை குணப்படுத்தலாம்.