பெண்கள் சிரிப்பதற்கு எதிராகத்தான், ‘பொம்பளை சிரிச்சா போச்சு’ என்ற பழமொழியையே கண்டுபிடித்தார்கள். பாண்டவர்களின் புதிய தலைநகரில் அமைந்த மாளிகையில் துரியோதனன் வழுக்கிவிழ, அதைப் பார்த்துவிட்ட பாஞ்சாலி சிரிக்க, அதனால் ஏற்பட்ட அவமானம்தான் போருக்குக் காரணமாக அமைந்தது என இதற்கு விளக்கம்வேறு சொல்வார்கள்.
உண்மையில் ஆணோ… பெண்ணோ யார் சிரித்தாலும் அவர்களுக்கு நிறைய உடல்- மனரீதியான நன்மை கிடைக்கிறதென்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிரிப்பு என்றால், பல் மட்டும் தெரியும் சம்பிரதாயச் சிரிப்பல்ல. வயிறு குலுங்கச் சிரிப்பது.
அப்படிச் சிரித்தால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா? உங்களது நோயெதிர்ப்பு சக்தி வலுப்படும், நல்ல மனநிலை தொடரும், வலியில் உள்ளவர்களுக்கு வேதனை குறையும், உடல் எடை குறையும், இடுப்பு பலப்படும். இத்தனை ஆதாயம் இருக்கும்போது சிரிக்க கசக்கவா செய்கிறது உங்களுக்கு!