![Remedy for Thyroid; Avoid These Habits](http://image.nakkheeran.in/cdn/farfuture/pEbafEouIFUcoEwU8zLwz4w-HfW10i1MdLf8899pSAc/1679396562/sites/default/files/inline-images/Aarthi_0.jpg)
தைராய்டு நோயால் இன்று பலரும் பாதிக்கப்பட்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தைராய்டு நோயை குணப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும் நோயின் தீவிரத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்.
தைராய்டு நோய் நம்முடைய உடலில் எப்போது ஏற்படுகிறது என்பது கண்டறிய முடியாத ஒன்று. ஆனால் காலப்போக்கில் உடல் சோர்வு, இரத்தப்போக்கு, முடி உதிர்வு போன்ற சிறிய அறிகுறிகள் தென்படும். தைராய்டில் ஹைபோ தைராய்டு (உடல் எடை கூடுவது) ஹைப்பர் தைராய்டு (உடல் எடை குறைவது) என்று இரு வகைகள் உண்டு. இதில் ஹைப்போ தைராய்டு சற்று கடுமையானது. தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை கூடும், ஞாபக சக்தி குறையும். உடல் எடை கூடுவதால் ஒருவரைக் கிண்டல் செய்வது மிகவும் தவறு. இதனால் பாதிக்கப்பட்டவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார். திடீரென்று உடல் எடை கூடினாலோ குறைந்தாலோ அது தைராய்டுக்கான அறிகுறியாக இருக்கலாம். அவர்களுக்கு சோர்வு அதிகமாக இருக்கும். சிலருக்குத் தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் தைராய்டு நோயால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவரை அணுகி சரியான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஹோமியோபதியில் நல்ல சிகிச்சைகள் இருக்கின்றன. தைராய்டு நோயால் குழந்தையின்மை பிரச்சனை சிலருக்கு ஏற்படுகிறது. கோதுமை உணவுகள், துரித உணவுகள் போன்றவை தைராய்டை அதிகப்படுத்தும். அதிக கிரீம் சேர்த்த உணவுகளும் பாதிப்புகளை ஏற்படுத்தும். தைராய்டின் அளவைக் கட்டுக்குள் வைத்திருந்தால் பெண்களுக்கு மாதவிடாய், குழந்தை பெறுதல் ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படாது. தைராய்டின் அளவு அதிகரித்தால் நிச்சயம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடலில் தைராய்டு ஹார்மோன் சரியான அளவில் சுரக்காததால் தான் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டை குணப்படுத்துவதற்கு யோகா பயிற்சிகளும் இருக்கின்றன. அயோடின் உப்பு, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், ப்ரக்கோலி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சரியான உணவு முறையும் சரியான சிகிச்சையும் தைராய்டு நோயிலிருந்து விடுபட உதவும்.