எப்போதுமே மனச் சோர்வாக இருப்பதும், அதிகமாக செலவு செய்வதும் போன்ற செயல்பாடுகள் கூட மனநோய் சிக்கல்களுக்குள் வருவது குறித்து மனநல சிறப்பு மருத்துவர் பூர்ண சந்திரிகா விவரிக்கிறார்.
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். மிகுந்த சந்தோஷமாக இருப்பதும் மிகுந்த சோகத்தில் இருப்பதும் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. அளவுக்கு அதிகமான சந்தோஷத்தில் இருக்கும்போது தாங்கள் தான் கடவுள் என்கிற எண்ணம் சிலருக்கு வரும். உலகமே தன்னுடையது தான் என்கிற எண்ணம் ஏற்படும். தன்னால் எதுவும் முடியும் என்கிற மிதப்பு வரும்.
சிலர் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அனைவரோடும் நட்பாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் வீட்டில் பல பிரச்சனைகள் உண்டாகும். தேவையில்லாமல் பொருட்கள் வாங்குவது அவர்களுடைய பழக்கமாக இருக்கும். பணத்தை வீணாக செலவழிப்பார்கள். வெளிநாட்டில் வசித்த ஒரு செல்வந்தர் தினசரி விமான டிக்கெட் புக்கிங் செய்வதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார். இப்படிப்பட்டவர்கள் முதலில் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
வித்தியாசமாகப் பேசுவது, தூக்கமில்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களை மருத்துவரிடம் அழைத்து வர வேண்டும். செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி வந்ததால் இவர்களுக்கு பணத்தை அழிப்பது எளிதாக இருக்கிறது. இவர்களை இரவுப் பணிக்கு அனுப்ப வேண்டாம். இதுபோன்று குடும்பத்தில் இதற்கு முன்னர் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இன்னொருவருக்கும் அந்த பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இதை குணப்படுத்துவதற்கு மருத்துவ முறைகள் நிறைய இருக்கின்றன.