'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "வலிப்பு நோய் இருப்பவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழத்தான் வேண்டும். அவர்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். வலிப்பு நோய் நின்று போகும் என்பதற்கு வாய்ப்பு கிடையாது. வலிப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதுடன், மாத்திரையைச் சரியாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் மாத்திரையைச் சாப்பிட்டு இரவில் நன்றாக உறங்காமல் இருப்பதும் தான் வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணம். நோயாளிகள் வலிப்பு நோய் மருந்துகளை நிறுத்தக் கூடாது.
பொதுவாக, வலிப்பு வந்தால் அவர்கள் கைகள், கால்கள் உதறும் போது அடிபடாமல், அவர்களின் உடல் எவ்வளவு அசைகிறதோ, அதற்கேற்ப தாராளமான இடத்தில் அவர்களைப் படுக்க வைப்பது நல்லது. காற்றோட்டமான இடங்களில் படுக்க வைப்பது நல்லது. அவர்களுக்கு தேவை நல்ல ஆக்சிஜன். கையோ, தலையோ எதிலும் இடித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வலிப்பு வந்தால் பல்லைக் கடிப்பார்கள். நாக்கு துண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, துணியால் சுற்றி அவற்றை பல்லுக்கு அடியில் வைத்துப் பிடித்துக் கொண்டால் போதும்.
பின்னர், அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாம். ஜூஸ் கூட கொடுக்கலாம். டீ (அல்லது) பாலை கொடுக்கலாம். முகத்தில் தண்ணீர் இறைப்பது எந்த இடத்திலும் தேவையில்லாத விஷயம். கை மற்றும் கால்கள் அதிகம் உதறுவதால் வலி இருக்கும். அதனால், பாராசிட்டமால் கொடுக்கலாம். வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உணவு முறைகள் இல்லை" எனத் தெரிவித்தார்.