பல்வேறு டயட் முறைகள் குறித்து நமக்கு விளக்கி வரும் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா வயதானவர்களுக்கான ஒரு டயட் முறையை அறிமுகப்படுத்துகிறார். மேலும் வயதானவர்கள் திடீரென உடல் எடையைக் குறைக்கும் முன் கவனிக்க வேண்டியவற்றை விளக்குகிறார்.
வயதானவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணவுப்பழக்கம் இருக்கும். அதற்கு ஏற்றது போல் அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்படியான உணவுகளையே அவர்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். உடல் எடையைக் குறைப்பதற்கான உணவுகளை நாங்கள் அவர்களுக்குப் பரிந்துரைப்பதில்லை. திடீரென்று உடல் எடையைக் குறைத்தால் அந்த வயதில் அவர்களுக்கு வேறு சிக்கல்களும் பின்விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் எடையைக் குறைப்பதற்கான உணவு முறைகளில் எப்போதுமே சில பின்விளைவுகள் இருக்கும். வயதானவர்கள் எடுத்துக் கொள்கிற மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றையும் கவனித்து தான் உடல்பருமன் குறைப்பு பற்றி சொல்ல முடியும்.
அதிகமான காய்கறிகள் சேர்த்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்பதே வயதானவர்களுக்கு சரியாக இருக்கும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உடல் எடைக் குறைப்பிற்கான உணவு முறைகளைப் பின்பற்றுவது தவறு. எடைக் குறைப்பிற்கு மட்டுமல்லாமல் உடல் எடையைக் கூட்டுவதற்கு, ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நல்ல மனநலத்துக்கு என்று அனைத்துக்கும் சிறந்த உணவு முறைகள் இருக்கின்றன. புரோட்டின் உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முழு தானியங்கள், முளைவிட்ட பயிர்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவில் மீன் சேர்த்துக் கொள்வது நல்லது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலும், கூட்ட வேண்டும் என்றாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நல்ல கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முழு முட்டை, சிக்கன் ஆகியவையும் நல்லது.