தூக்கம் என்பது வாழ்வில் மிக மிக முக்கியமானது. ஆனால் இன்றைய இயந்திர உலகில் தூக்கம் குறித்த சரியான புரிதல் இருக்கிறதா என்பது சந்தேகமே. நல்ல தூக்கத்தின் அவசியம் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா நமக்கு விளக்குகிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலான தூங்கும் முறை இருக்கும். 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் புத்துணர்வு பெறும். இல்லையெனில் பகலிலும் தூக்கக் கலக்கமாகவே இருக்கும். உடலின் வேகம் குறையும். நம் உடம்புக்குள் ஒரு கடிகாரம் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நம்முடைய பணிகளை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். இரவு 10 மணிக்குத் தூங்கி பகல் 5 மணிக்கு எழுவது உடலுக்கு நல்லது. வயதானவர்களுக்கு மட்டும் இது மாறும்.
இரவு நேரங்களில் தான் நாம் பெரும்பாலும் மொபைல் ஃபோன்களைப் பார்க்கிறோம். இதுதான் உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. மொபைல் வெளிச்சம் நம் கண்ணில் இரவு நேரத்தில் படும்போது சூரியன் இன்னும் மறையவில்லை என்று நம்முடைய உடல் நினைத்துக் கொள்ளும். அதனால் உடலை விழிப்பு நிலையிலேயே வைத்துக் கொள்ளும். இரவு 9 மணிக்குத் தான் நம்முடைய உடலில் மெலடோனின் சுரக்கும். சரியான தூக்கம் இல்லாததால் சர்க்கரை நோய்க்கு ஆளானவர்களும் உண்டு.
உணவினால் மட்டுமே சர்க்கரை நோய் ஏற்படும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சரியான தூக்கம் இல்லையென்றாலும் சர்க்கரை நோய் ஏற்படும். சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் உண்ணாமல் இருப்பது, துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, அதிக உடல் உழைப்பு இல்லாமை ஆகியவையும் சரியான தூக்கம் வராமல் இருப்பதற்கு முக்கியமான காரணம். நம் உடல்நிலையைக் கெடுக்கும் முதன்மையான வில்லன் மொபைல் ஃபோன் தான் என்று சொல்லலாம்.
குழந்தைகளும் இளம் வயதினரும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தூக்கம் குறித்த ஆராய்ச்சிகள் தற்போது தான் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்தால் தான் நம்முடைய உடல் சரியான வகையில் இயங்கும் என்பது நிதர்சனம்.