மனிதர்களின் முன்னெற்றத்துக்கு பெரிய இடைஞ்சலாக இருப்பது நான் பெரியவனா, இல்லை நீ பெரியவனா என்ற மனோபாவம். பெரிய அரசர்கள் முதல் பணக்கார்கள் வரை, இந்த எண்ணத்தால் சரிந்தவர்கள் ஏராளம். எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் இந்த எண்ணத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியாமல் தவிக்கின்றார்கள். இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு வாழும் உதாரணங்களே இருக்கிறார்கள். இந்த யார் பெரியவன் என்ற மனோநிலையே உலகப்போர்கள் ஏற்பட கூட காரணமாகவும் அமைந்திருந்தன. இந்த எண்ணத்தை எப்படி எளிமையாக கடந்து போகலாம் என்பதை நாம் ஒரு கதை மூலம் காணலாம்.
கந்தன் என்ற காட்டுவாசி முகிலன் என்ற யானையை வளர்த்து வந்தார். காலை நேரத்தில் யானையை குளிப்பாட்டும் நோக்கில் அதனை காட்டில் உள்ள நதி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். யானை ஆர்வமாக குளிப்பதை பார்த்த அவர், யானையை அங்கேயே விட்டுவிட்டு தான் சிறிது நேரம் கழித்துவருவதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நன்றாக ஆற்றில் குளித்த யானை கந்தன் வர நேரமானதால் ஒற்றையடி பாதை வழியாக வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தது. அதே வழியில் மாரி என்ற பன்றியும் எதிரே நடந்து வந்தது. சேரும் சகதியுமான நிலையில் மாரியை பார்த்த யானை ஒற்றையடி பாதையில் இருந்து சற்றுவிலகி நின்றுக்கொண்டு பன்றி செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது.
பன்றியும் அந்த வழியாக சென்றது. பின்னால் வந்த தன் நண்பர்களிடம் யானை தன்னை பார்த்து பயந்து வழி விட்டதாக மாரி பன்றி கூறிச் சிரித்தது. குளித்துவிட்டு வரும் நாம் பன்றியிடம் மோதி நாமும் சேராக வேண்டாமே என்ற எண்ணத்தில் நாம் ஒதுங்கி சென்றால் பன்றி இவ்வாறு எடுத்துகொண்டுள்ளதே என்று சிந்தித்தவாறே யானை அந்த இடத்தை கடந்து சென்றது. வேகமாக மூச்சு காற்று விட்டாலே சிதறி செல்லும் பன்றியிடம் போய் தன்னுடைய பலத்தை காட்டாமல் முகிலன் யானை நடந்து கொண்ட விதத்தை மாரி பன்றி வேறு ஒரு விதமாக எடுத்துக்கொண்டது. உருவத்தை வைத்து பெரியவர், சிறியவர் என்ற பதம் தீர்மானிக்கபடுவதில்லை, அவர்களின் நன்னெறி குறையா செயல்பாடுகளே அதனை தீர்மானிக்கின்றது என்பதே இந்த கதை சொல்லும் நீதி!