உடற்பயிற்சி செய்தும் சரியான உணவு முறையை பின்பற்றியும் மன அழுத்தம் நிறைந்து தூக்கமின்மையால் அவதியுற்றால் டயாப்பட்டீஸ் வருமா என்ற கேள்விக்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம் அளிக்கிறார்.
தூக்கமே வரமாட்டேன் என்கிறது, ஒழுங்காக தூக்கமே இல்லாமல் தவிப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் தம்பதியினர் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு 17 நாள் விதவிதமான முறையில் மன அழுத்தம் குறைத்து தூக்கம் வர வைக்க முயன்றும் தூக்கம் வரவேயில்லை என்றார்கள். சரி உடல்நிலையையும் கவனிக்க வேண்டும் என்று இரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னேன். பரிசோதனை முடிவில் டயாப்பட்டீஸ் இருப்பதை உறுதி செய்ய முடிந்தது.
அந்த தம்பதியினரால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்புகள் நடக்கிறோம், உடற்பயிற்சிகள் செய்கிறோம். ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையோடு தான் உணவு எடுத்துக் கொள்கிறோம் அப்படியிருக்கையில் எங்களுக்கு டயாப்பட்டீஸ் வர எப்படி வாய்ப்பிருக்கிறது என்று கேட்டார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை. சுகர் செக் மானிட்டர் எடுத்து வரச்சொல்லி பரிசோதித்தால் அதுவும் அதிக அளவு காட்டியது. இளம் வயதிலேயே எங்களுக்கு டயாப்பட்டீஸா? நாங்கள் ஆயுசுக்கும் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று அதற்கு தனியாக டிப்ரசன் ஆக ஆரம்பித்தார்கள்.
எல்லாமே சரி செய்ய முடிகிற பிரச்சனை தான் என்று அவர்களை சமாதானப்படுத்தி நூறு நாட்களுக்கு அவர்களுக்கு டயட் சார்ட் தயாரித்து கொடுத்தேன். அசைவப்பிரியர்கள் என்பதால் மீன், சிக்கன், மட்டன் போன்றவற்றை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தேன். குறிப்பாக மட்டன் சூப்கள் அதிகம் எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தேன். சின்சியராக நான் சொன்னதை பின்பற்றினார்கள். தூக்கத்தின் அவசியம் குறித்தும் தொடர்ச்சியாக சொல்லி வந்தேன்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை எடுத்துப் பார்த்த போது டயாப்பட்டீஸ் அளவு மிகவும் குறைந்திருந்தது. தூக்கமின்மையாலும் டயாப்பட்டீஸ் வர வாய்ப்பிருக்கிறது என்பதை அந்த தம்பதியினர் உணர்ந்து கொண்டு சரியான தூக்கத்தினையும் உடற்பயிற்சி உணவு ஆகியவற்றை எடுத்துக் கொள்வதாக உறுதி எடுத்துக் கொண்டார்கள்.