
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ளது அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், உணவு இடைவேளையின் போது மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் இருந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதிலிருந்து தேனீக்கள் உணவு அருந்திக் கொண்டிருந்த மாணவ, மாணவி சுமார் 20-க்கும் மேற்பட்டோர்களை கொட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் மீட்ட ஆசிரியர்கள் அருகாமையில் உள்ள வாணாபுரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதில், நான்கு மாணவர்கள் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாணவர்களுக்கு வாணாபுரம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக பள்ளியில் உள்ள தேனீக்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி மாணவ மாணவிகளை தேனீக்கள் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.