கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் அவற்றை சரி செய்துகொள்ள வேண்டிய தீர்வுகள் குறித்தும் பிரபல கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களிடம் நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.
கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ; உறுத்தல் ஏற்பட்டாலோ உடனடியான முதல் உதவி மருத்துவமாக தாய்ப்பாலை கண்களுக்குள் விடுவது; மூலிகை இலை என எதையாவது நசுக்கி அதன் சாற்றை கண்களில் ஊத்துவது மற்றும் எண்ணெய் விடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள். அதை தவிர்த்தே ஆக வேண்டும். ஏனெனில் அவற்றில் என்ன மாதிரியான சத்துகள் உள்ளது என்பதையும் பலவிதமான பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் இருக்கலாம் அவற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தெரியாமல் செய்யக் கூடாது. அது நன்மை தராது.
குறிப்பாக தாய்ப்பால் இனிப்பு சுவை மிகுந்தது; இனிப்பு என்பது வளர்வதற்கு உதவி செய்யும் தன்மை கொண்டது. கண்ணில் உள்ள பாக்டீரியா, வைரஸ்களை வளரச் செய்யும். இதனால் கண் செப்டிக்காகி சீழ் பிடித்து கண் பார்வையே பறிபோகும் தன்மை உடையது. கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தையும் பாதிக்கும். பாதிக்கப்பட்ட பிறகு ஒரே தீர்வாக கண்ணையே மாற்றியாக வேண்டிய சூழல் ஏற்படும்.