நீரிழிவு நோய் குறித்த பல்வேறு தகவல்களை சித்த மருத்துவர் அருண் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
உலகில் நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா இன்று இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நீரிழிவு நோயாளரை நாம் பார்க்க முடியும். உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு குறைந்தது தான் இதற்கான காரணம். நாள்பட்ட நீரிழிவு நோயாளருக்கு காலில் புண் ஏற்படும். செருப்பு போடாமல் இருத்தல், பாதங்களை சரியாக பராமரிக்காமல் இருத்தல், சர்க்கரையை கட்டுக்குள் வைக்காமல் இருத்தல் ஆகியவையே இதற்கு காரணம். கால்களில் ரத்த ஓட்டம் குறைவதால் உணர்வு இழப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது மருத்துவரை சந்தித்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாதத்தில் உணர்வு இழப்பு ஏற்படுவது என்பது ஆரம்பகட்ட அறிகுறிகளுள் ஒன்று. அப்போதே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். நீரிழிவு நோயாளர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் ஆறுவதற்கு அதிக நாளாகும். வலிக்காமல் இருப்பதால் புண்கள் குறித்து பலர் கவலைப்பட மாட்டார்கள். கவனிக்காமல் விட்டால் புண்கள் அழுகி, எலும்புகள் வரை செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. புண்கள் எந்த நிலையில் இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவார்கள். எல்லை மீறிய நிலையில் தான் விரல்களை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவை அனைத்தும் நவீன மருத்துவம் சொல்லும் வழிகள்.
சித்த மருத்துவத்தில் மருந்துகள் மூலமாகவே இந்தப் புண்களை குணப்படுத்த முடியும். விரல்களை, கால்களை எடுக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை. உள் மருந்துகள், வெளி மருந்துகள் மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் புண்களை ஆற்ற முடியும். நீரிழிவு நோயாளர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் சரியாக இருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் புண்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். தரையில் படுத்து உருளுவது கூட ஒரு வகையான பயிற்சிதான். இதன் மூலம் சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கும். இதற்கு சித்த மருத்துவத்தில் நிறைய மருந்துகளும் இருக்கின்றன.