கருவுறுதலில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் தாட்சாயிணி விவரிக்கிறார்.
கணவன் மனைவி இருவரும் அதிக உடல் எடையோடு இருப்பது இப்போது பல தம்பதியினரிடையே முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அவர்கள் சரியான வழியில் உணவு உண்ணமாட்டார்கள். ஐடி துறை, வங்கித் துறை போன்றவற்றில் வேலை பார்ப்பவர்கள் தான் எங்களிடம் அதிகம் வருகின்றனர். பொதுவாக அவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கும். சூரிய வெளிச்சம் நம் மீது படுவது நமக்கு மிகவும் முக்கியம். நடைப்பயிற்சி மேற்கொள்வது வைட்டமின் டி சத்தை நமக்கு வழங்கும்.
மிக இளம் வயதினருக்கே இப்போது முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடற்பயிற்சி என்பது இல்லாமல் இருப்பது, தவறான உணவுப் பழக்கம் போன்றவையே இதற்கான காரணமாக இருக்கிறது. உடல் உழைப்பு மற்றும் உடல் வேலை அவர்களுக்கு இப்போது முற்றிலும் குறைந்துவிட்டது. எடுத்தவுடன் மாத்திரை மருந்து கொடுப்பது நம்முடைய பாணியல்ல. கருவுறுதலில் பிரச்சனை எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து அதை சரி செய்வதற்கான பணியில் நாங்கள் ஈடுபடுவோம். ஹார்மோன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம்.
பெண்களுக்குத் தேவையான ஸ்கேன்களை நாங்கள் மேற்கொள்வோம். சிலருக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமான வலி ஏற்படும். சிலருக்கு அதிக உடல் பருமன் ஏற்படும். சிலருக்கு சரியான காலத்தில் மாதவிடாய் ஏற்படாது. முகத்தில் சிலருக்கு முடி வளர்ச்சி ஏற்படும். சில குறிப்பிட்ட உணவு முறைகளை நாங்கள் அவர்களுக்கு பரிந்துரைப்போம். யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வதால் அவர்களுடைய தினசரி வேலைகளை அவர்களால் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
மன அழுத்தம் குறைந்தாலே பாதி பிரச்சனைகள் குறையும். கவுன்சிலிங் செய்த பிறகு அவர்களுக்குத் தேவையான சரியான சிகிச்சையை நாங்கள் வழங்குவோம். மருத்துவ சிகிச்சையின் மூலமே பெரும்பாலான தம்பதியினரின் பிரச்சனைகள் தீரும். சிலருக்கு மருத்துவ சிகிச்சையையும் மீறிய தெரபிகள் தேவைப்படும். கணவனுக்கும் மனைவிக்கும் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிறகு அவர்களுக்கு எந்த வகையான சிகிச்சை பலனளிக்கும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.