பெண்களுக்கு ஏற்படுகிற தொற்று நோய் பிரச்சனைகள் பற்றி நக்கீரன் நலம் யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக பிரபல மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் பேசி வருகிறார். அந்த வகையில் பெண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்ப் பாதை தொற்று குறித்து அவர் பேசியவை பின்வருமாறு...
பெண்களை மிகவும் பாதிக்கக்கூடியது சிறுநீர்ப் பாதை தொற்று ஆகும். இந்த யூரினரி டிராக் இன்பெக்சனால் பாதிக்கப்படாத பெண்களே இல்லை என்று கூட செல்லலாம். அந்த அளவிற்கு யூரின் போகும் இடத்தில் எரிச்சல், அரிப்பு மற்றும் வலி இருக்கும். தொற்றின் அளவு அதிகமானால் குளிர், காய்ச்சல் உருவாகும். ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை அதிகம் வருகிறதென்றால் பெண்களின் சிறுநீர் போகும் பாதைக்கான உறுப்பும், மலக்கழிவு வெளியேறுகிற இடமும் அருகருகே இருப்பது தான் காரணமாகும். சிறுநீர் பாதையே வெறும் நான்கு சென்டி மீட்டர் அளவு கொண்டது. அதன் அருகேயே உடலுறவு பாதையும் உள்ளது அதன் வழியாகத்தான் சுகப்பிரசவமும் நடைபெறும். இதெல்லாமே பெண்களுக்கு சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்படுவதற்கான அடிப்படையான காரணங்கள்.
யூரினரி இன்பெக்சன் உருவாகிறது என்றால் உடனே பயப்பட வேண்டிய அவசியமில்லை. மருத்துவ முறைப்படி ஏகப்பட்ட மெடிசின்கள் கிடைக்கிறது. சிலருக்கு எந்த சிகிச்சையும் செய்யாமலும் குணமாகும். எப்போதாவது ஏற்படுகிறவர்கள் எந்த கவலையுமின்றி தொற்று ஏற்படும் போது சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ஆனால், அடிக்கடி தொற்று ஏற்படுகிறவர்கள் கண்டிப்பாக அதில் கவனம் செலுத்தி சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து முறையாக மெடிசின்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு இந்த தொற்றின் தீவிரத் தன்மை அடையும் போது கிட்னி பெயிலியர் ஆகிடுச்சோ என்ற கவலை வர ஆரம்பித்து விடும். சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டு அதனால் கிட்னி பாதிப்பு கண்டிப்பாக ஏற்படாது.
கிட்னி பெயிலியர் என்பது சுகர் பிரச்சனை அதிகரித்து; பிளட் பிரசர் அதிகரித்து; தேவையில்லாமல் பெயின் கில்லர் எனப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு, மாற்று மருத்துவ முறைகள் என்று சிலவற்றை நம்பி என்ன மாதிரியான மருந்தினை எடுத்துக் கொள்கிறோம் என்றே தெரியாமல் சாப்பிடுபவர்களுக்கு கண்டிப்பாக ஆவதற்கான வாய்ப்பு உள்ளது.