Skip to main content

“டிசம்பர் மாதத்தில் எப்படி உடை அணிய வேண்டும்” - விளக்குகிறார் மருத்துவர் அருணாச்சலம்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

“How to dress in December” - Dr. Arunachalam explains

 

நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம், காலநிலை மாற்றத்தால் வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள், தூக்கம் தொடர்பான கேள்விகளுக்கு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இந்தக் குளிர்காலங்களில் குறிப்பாக இந்த டிசம்பர் மாதத்தில் என்ன மாதிரியான உடை அணிய வேண்டும் என்று விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியதிலிருந்து...

 

“வெளிநாடுகளில் காலநிலை மாற்றம் திடீர் திடீரென மாறும். ஆனால், நம்முடைய காலநிலை மாற்றம் என்பது மெதுவாகத்தான் மாறும். நம்ம ஊரில் இலையுதிர் காலத்தில் ஒரே நாளில் எல்லா இலையும் உதிராது. அப்படித்தான் திடீர்னு குளிர்காலம் வருவது இல்லை. கோடை காலத்தில் பிறந்த குழந்தையும் இப்படித்தான் தன்னை மாற்றிக் கொள்ளும். இதனையும் இவ்வாறு தான் நாம் பார்க்க வேண்டும். குழந்தை போர்த்திக்கிட்டு படுக்கலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணும் வரைக்கும் டாக்டர் கிட்ட வருவாங்க. நன்றாகப் போர்த்தி படுக்கும் ஆரம்பித்த பிறகு டாக்டர் கிட்ட வர மாட்டாங்க. நோயாளிகள் நவம்பர், டிசம்பரில் குறைவாக இருப்பார்கள். ஆனால் ஆகஸ்ட், செப்டம்பரில் அதிகமாக இருப்பார்கள். 

 

நம்ம உடல் வெப்பநிலை 98.6 டிகிரியில் தான் இருக்கும். நம்ம உடம்பு, சூட்டையும் வெயிலையும் தாங்கிக் கொள்ளும். ஆனால் குளிர்ச்சியைத் தாங்காது. நம்முடைய உடல் வெப்பநிலை 98.6 டிகிரி வரைக்கும் இருக்கும் போது நமக்கு ஏதும் தேவை இல்லை. அதற்கும் கீழே போகும்போது தான் நம் உடம்பு அந்த வெப்பநிலையை பராமரிக்க போராடும். இந்த வெப்பநிலையில் தான் இதயம், கிட்னி செயல்படும். நுரையீரலில் வாயு பரிமாற்றம், மூளை நல்லா வேலை செய்யும். இதிலிருந்து வெப்பநிலை குறையும் போது தான் நாம் சூட்டை கட்டுப்படுத்த வேண்டும். விலங்குளில் கூட சிங்கம், கரடி, சிம்பன்சி போன்ற விலங்குகளில் உரோமம் உள்ளதற்கு காரணம் குளிர்நேரத்தில் தங்களைப் பாதுகாத்து கொள்ளத்தான். மனிதர்களைப் பொறுத்த வரைக்கும் முன்பு உடலில் முடி இருந்தது. சட்டையைத் தொடர்ந்து அணிவதால், தற்போது முடிகள் வளர்வது இல்லை. 

 

குழந்தைகளை பொறுத்த வரைக்கும் மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால், இனிமேல் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் முழுக்கையுடன் கூடிய துணியை அணிய வேண்டும். குழந்தைகளுக்கு உடையின் முக்கியத்துவம் சொல்லி வளர்க்க வேண்டும். அதற்கு அம்மாவும் அப்பாவும் நன்றாக உடை அணிய வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். சிலீவ்லெஸ் துணியை இந்த நான்கு மாதங்களுக்கு போடக்கூடாதுன்னு சொல்லி வளர்க்க வேண்டும். கைகள் மற்றும் கால்களை முழுவதும் மறைக்கும் வகையில் ஆடைகளை அணிய வேண்டும். இது குழந்தைகளை கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கும்.

 

தோல் அரிப்புனு சொல்லிட்டு நிறைய பேர் வருவார்கள். அதுவும் அந்த அரிப்பு ஆடைகள் அணியாத பகுதிகளில் தான் இருக்கும். அதுவும் கூட கொசுக்கடி தான். அதனை அம்மை நோய்னு சொல்லி மருத்துவம் பார்ப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆணோ பெண்ணோ, ஜீன்ஸ் இந்த நான்கு மாதங்கள் அணியலாம். ஆனால் அடுத்த எட்டு மாதங்களுக்கும் ஜீன்ஸ் செட் ஆகாது. நாம் செல்லும் இடத்தைப் பொறுத்து தான் ஆடை தேவைப்படும். நாம் செல்வது ஏசி அரங்கு, சினிமா தியேட்டர் என்றால் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து செல்லலாம். மாலை நேரங்களில் பீச்சுக்கு செல்லும் போது கூட ஜீன்ஸ் அணிந்து செல்லலாம். 

 

வெயில் நேரத்தில் எப்போது எல்லாம் வியர்க்குதோ, அப்போது அந்த வியர்வையை உறிஞ்சுற மாதிரி ஆடை அணியலாம்.  வியர்வையை உறிஞ்சாத ஆடையை அணியும் போது, அதனால் வரும் பூஞ்சை தொற்று நோய் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுத்துற மாதிரி இருக்கும். அதற்கு ஆடை அணிவது குறித்த விழிப்புணர்வு ரொம்ப முக்கியம். இந்த மாதிரி மழை நேரத்தில் உடம்பு சூடு ஆகுற மாதிரி கொஞ்சம் சூடாக தண்ணீர், பால்,  டீ குடிக்கலாம். கேன் வாட்டர் குடிச்சிக்கலாம். ஜில்லுனு இருக்க வேண்டிய தேவை இல்லை.  உடம்பை சூடாக வைத்துக் கொள்ள வேண்டும்.