தினந்தோறும் சாலையில் நடக்கும் விதிமீறல்கள் குறித்தும், அவற்றை நாம் எப்படி திருத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மனநல மருத்துவர் டாக்டர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.
சாலையில் பலர் வழி விடாமல் செல்வது பற்றியும், ஹார்ன் அடித்துக்கொண்டே இருப்பது பற்றியும் சமீபத்தில் இருவரிடையே நடந்த ஒரு விவாதத்தைப் பார்த்தேன். இப்போது சாலையில் அனைவரும் செல்லும் வேகம் அதிகரித்துள்ளது. பல்வேறு வாகன ஓட்டிகளுக்கு இடையே சாலைகளில் சண்டை நடப்பதை தினமும் நாம் பார்க்கிறோம். அதைத் தடுப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. ஏன் இதுபோன்ற சண்டைகள் நடக்கின்றன? தினசரி ஒரு அசம்பாவித சம்பவமாவது சாலைகளில் நடக்கிறது.
கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையும், பொறுமையும் அனைவருக்கும் வேண்டும். சாலையில் இறங்கி சண்டை போடுவதால் நம்முடைய பயணமும் மனநிலையும் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். சிறிய பிரச்சனைகள் தான் வன்முறைகளாக மாறுகின்றன. இப்படியான பிரச்சனைகள் ஏற்படும்போது அந்த இடத்தை விட்டு நகர்வதே சரியான தீர்வு. யாராவது தவறான முறையில் வண்டி ஓட்டி இடித்துவிட்டால், போலீசாரையும் இன்சூரன்ஸ் அதிகாரிகளையும் அணுக வேண்டும். அந்த நேரத்தில் ஏற்படும் கோபத்தைத் தவிர்க்க வேண்டும்.
கோபத்தோடு நாம் கத்தும்போது நம்மோடு வந்திருக்கும் நம்முடைய குடும்பத்தினரும் பயப்படுவார்கள். விபத்தில் பெண்கள் ஈடுபட்டால், அவர்களை எளிதில் குற்றம் சொல்லும் மனநிலையும் இங்கு இருக்கிறது. பெண்கள் என்றால் தவறான முறையில் தான் வண்டி ஓட்டுவார்கள் என்கிற தவறான கற்பிதம் இருக்கிறது. அந்த நேரத்தில் பிரச்சனைகளைக் கடந்து செல்வதுதான் சரியானது. இப்போதைய இளைஞர்களிடம் வேகம் அதிகமாக இருக்கிறது. மிக இளம் வயதில் குழந்தைகளுக்கு பைக் வாங்கித் தர வேண்டாம் என்று பெற்றோருக்கு நாம் எவ்வளவோ சொல்கிறோம். ஆனாலும் யாரும் கேட்பதில்லை.
கோபத்தையும் வேகத்தையும் கட்டுப்படுத்தி மனித நேயத்தோடு வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால், சாலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் தீரும். நாம் கூறும் கடும் சொற்கள் எப்போதும் மறக்காது. சிலருக்கு கோபம் என்பது சுபாவத்திலேயே இருக்கும். மற்றவர்களைத் திட்டிவிட்டு அதற்காக வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்கள். மன நிம்மதியுடனும் அமைதியுடனும் வாகனத்தை ஓட்ட வேண்டும். அப்படி இருந்தால் ஜென் மனநிலைக்கு மாறிவிடலாம்.