உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் 'கேஸ் லைட்டிங்' என்றால் என்னவென்று விளக்குகிறார்.
சோஷியல் மீடியாவில் 'கேஸ் லைட்டிங்' என்று சுலபமாக பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. ஒரு சிலர் இதை டார்க் காமெடி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த 'கேஸ் லைட்டிங்' என்பது 1930ல் பிரிட்டிஷில் வந்த திரைப்படம் ஒன்றின் மூலம் பிரபலமானது. அதில் வரும் வக்கிர புத்தி கொண்ட கணவன் தன் மனைவியை எமோஷனல் அபியூஸ் பண்ணுபவன். வீட்டில் இருக்கும் எல்லா கேஸ் விளக்குகளையும் மங்க வைத்து விடுகின்றான். மனைவி அதை சரிசெய்யும்படி சொல்லும்போதும் கூட அதை அப்படியே மனைவியின் பக்கம் திருப்பி உனக்கு தான் ஏதோ மனக்கோளாறு அதனால் தான் அப்படி தெரிகிறது மற்றபடி விளக்குகள் எல்லாமே நன்றாகத் தானே எரிகிறது என்று குழப்பிவிடுகிறான். அந்த மனைவியும் அதை நம்பி சுயநம்பிக்கையை இழந்து தனக்கு தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தன்னை இழக்கிறாள். இதன் மூலமாவே 'கேஸ் லைட்டிங்' பிரபலம் ஆனது.
இது காலம் காலமாகவே நடந்து வருகிறது. ஆனால் அவ்வளவாக இதை யாருமே எமோஷனல் அபியூஸ் என்று கவனம் காட்டவில்லை. இந்த 'கேஸ் லைட்டிங்' எங்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறதோ அங்கு நடக்கலாம். ரொம்ப அன்யோன்யமாக இருக்கும் உறவுகளிடமும், சில சமயம் பெற்றோர் - குழந்தைகள் உறவிலும் கூட இது நடக்கலாம். எல்லோர் முன்னாடியும் தன்னுடைய பார்ட்னரை அசிங்கப்படுத்துவது, மட்டம் தட்டுவது அல்லது அவர் கூச்சம்படும்படி ஏதும் செய்வது, கண்ட்ரோல் செய்வது போன்றவை 'கேஸ் லைட்டிங்'இல் நடக்கும். அதை குறித்து கேட்டால் கூட, உனக்கு தான் ஏதோ பிரச்சனை, நான் விளையாட்டாக சொன்னதை நீதான் அப்படி எடுத்து கொள்கிறாய் என்று சொல்லி அவரையே குற்றவாளி ஆக்குவது.
கடந்த காலத்தில் நடந்த சம்பவத்தை சொல்லி காட்டும்போது கூட தான் அப்படி சொல்லவே இல்லை, தன்னுடைய பார்ட்னர் தான் பொய் சொல்கிறார் போல மாற்றி நிஜத்தை மறுப்பது இது 'கேஸ் லைட்டிங்கில்' அடங்கும். இது போன்றவை எந்த ஒரு நபர் 'நார்சிசம்' குணாதசியம் கொண்ட நபர்களோடு இருக்கிறார்களோ, இந்த 'கேஸ் லைட்டிங்' என்ற எமோஷனல் அபியூஸ் நடக்கும். இவர்களோடு நாளடைவில் இருந்து இன்னல்களை அனுபவிக்கும்போது அவர்கள் தங்களுடைய சுய மதிப்பை இழந்து, தான் யார் என்ற அடையாளத்தையே இழந்து விடுவார்கள். இதுவும் ஒரு வகை எமோஷனல் அபியுஸ்தான்.