Skip to main content

“மனநோயிலிருந்து மீள குடும்பத்தின் ஆதரவு தேவை” - மனநல மருத்துவர் புனிதவதி

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

| Dr Punithavathi | Psychiatrist |

 

மனநோய் ஏற்பட்டவர்களின் மனநிலை குறித்து மனநல மருத்துவர் புனிதவதி விவரிக்கிறார்.

 

மனநோய் ஏற்பட்டவர்களால் தங்களுடைய வேலையில் கவனம் செலுத்த முடியாது. தன்னைப் பற்றி யாரோ பேசிக்கொண்டிருப்பது போல் எப்போதும் அவர்களுக்குத் தோன்றும். கற்பனையான விஷயங்களை அவர்களாகவே உருவாக்குவார்கள். அதை அவர்கள் முழுமையாக நம்புவார்கள். அவர்கள் நினைப்பதை முழுமையாக பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நண்பர்கள் கிடைப்பது அரிது. எனவே மனநல மருத்துவர்களிடம் அவர்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்வார்கள்.

 

தங்களுக்கு ஏற்பட்டிருப்பது நோய் என்பதை மட்டும் அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களில் பலர் நாள் கணக்கில் குளிக்காமல் இருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டார்கள். எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. பெரும்பாலும் 20 வயதிலேயே இந்த நோய் ஏற்படுவதால், இவர்கள் திருமணம் செய்வது அரிதான ஒன்றுதான். சிலருக்கு திருமணம் நடந்த பிறகு இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏற்படும். அவர்களால் தங்களுடைய குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியாது. 

 

இந்த நோயிலிருந்து வெளிவருவதற்கு அவர்களுக்கு குடும்பத்தின் ஆதரவு என்பது நிச்சயம் தேவை. குடிகார அப்பாவை தினமும் பார்க்கும் பையனும் குடிகாரனாக மாற வாய்ப்பு இருக்கிறது. இதுவும் ஒரு வகையான மனநோய் தான். இந்த நோயை குணப்படுத்துவதற்கு நிச்சயம் மருந்துகள் இருக்கின்றன. உளவியல் ரீதியாக அவர்களிடம் பேச வேண்டும். அவர்கள் சொல்வதை முதலில் காதுகொடுத்து கேட்க வேண்டும். இவற்றோடு சேர்த்து மருந்து மாத்திரைகளும் கொடுக்கும்போது நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.

 

ஒருவருக்கு மனநோய் ஏற்பட்டிருக்கிறது என்கிற சந்தேகம் வரும்போதே எங்களிடம் அழைத்து வந்தால் விரைவாக குணப்படுத்த முடியும். மருந்துகள் மற்றும் தெரபிகள் மூலம் அவர்களை நாம் குணப்படுத்துவோம். சிகிச்சை முடிந்து முற்றிலும் சாதாரண மனிதர்கள் போல் மாறிய பலரை நாங்கள் பார்த்துள்ளோம். நம்மிடம் வரும் பல நோயாளிகள் அதற்கு முன்பாக சாமியார்கள், மந்திரவாதிகள் போன்றவர்களை சந்தித்துவிட்டு அதன்பிறகே நம்மிடம் வருகின்றனர். நமக்குப் புரியாத விஷயங்களை கடவுள் அல்லது நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்று நாம் நினைக்கிறோம். நம்பிக்கை என்பது நிச்சயம் தேவை. ஆனால் நோய் குறித்த சரியான புரிதலும் வேண்டும்.