மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்தின் தற்போதைய நிலை குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்
மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் மிகுந்த மரியாதையோடு பார்த்த காலம் ஒன்று இருந்தது. மருத்துவரை கடவுளாகவே பார்த்தார்கள். தெய்வம் நேரில் வர முடியாததால், தெய்வத்தின் பிரதிநிதி மருத்துவர்தான் என நம்பினர். மருத்துவர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே மக்கள் செய்தார்கள். விஞ்ஞானம் வளர வளர, போட்டி மனப்பான்மை அதிகரித்தது. மருத்துவத்தில் நிபுணத்துவம் என்கிற விஷயம் உள்ளே வந்த பிறகு, பரிசோதனைக்கூடங்கள் அதிகமாக அதிகமாக, தொடர்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன.
இப்போது பலர் மருத்துவரை ஒரு எதிரியாகவே பார்க்கின்றனர். நம்பகத்தன்மை என்பது இன்று பெரிய அளவில் குறைந்துள்ளது என்பதை நான் வருத்தத்துடன் சொல்கிறேன். ஒரு மருத்துவரிடம் செல்லும்போது, என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது, என்னென்ன செய்தால் இது குணமாகும் என்று விளக்கமாக சொல்வார். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நபர்களின் சதவீதம் இன்று குறைந்துள்ளது. ஒரு மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகு, அவர் மீது நம்பிக்கை இல்லாமல் இன்னும் சில மருத்துவர்களிடம் விசாரிக்கின்றனர்.
இது ஒரு பெரிய மாற்றம். இதன் மூலம் சில நன்மைகளும் இருக்கின்றன, நன்மை இல்லாத சூழ்நிலையும் இருக்கிறது. நோயாளி தான் சொல்வதை நம்பப் போவதில்லை என்று தெரிந்தால், மருத்துவரின் ஆர்வமும் குறையும். அவருடைய கமிட்மெண்ட் என்பது குறையும். மருத்துவர்களின் மீது நோயாளிகளுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி இதில் பெரும்பங்கு வகிக்கிறது. அனைத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும், அனைத்து விதமான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மருத்துவர் தள்ளப்படுகிறார். இது ஒரு வகையில் நன்மைதான். ஆனால் அலைபேசி மூலம் அனைத்து வகையான நோய்கள் குறித்தும் நோயாளிகள் அவர்களாகவே இன்டர்நெட்டில் தேடுவது இப்போது அதிகரித்துள்ளது. அவர்களே தேடி, அவர்களே கண்டுபிடித்து, அவர்களே பயப்படுகிறார்கள். உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும், ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியான பிரிவுகள் மருத்துவத்துறையில் வந்துவிட்டன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இப்போது டாக்டர்கள் இருக்கின்றனர். குடும்ப டாக்டர் என்கிற கான்செப்ட் இப்போது குறைந்து வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.