Skip to main content

புறாவால் தொலைத்த வாழ்க்கையை அந்தப் புறாவே வாழ வைக்கும் சுவாரஸ்யமான கதை !

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

சக உயிர்களை நேசித்த இச்சமூகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் பறவை, விலங்குகளிடமிருந்து விலகி, ஏன் மனிதர்களிடத்தில் இருந்தும் அந்நியப்படத் துடிக்கும் காலகட்டத்தில் இருப்பது என்பது மிகப் பெரிய கொடுமை. இப்படி மனிதனோடு ஒட்டி வாழக் கூடிய உயிர்களில் புறாக்களும் ஒன்று. மனிதனோடு பழகி, அவர்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் கூட புறாவின் சிறப்பு. மன்னர்கள் காலத்தில் கடிதம் மூலம் தூது அனுப்பக் கூடிய அளவிற்கு மனிதர்களின் நம்பிக்கையைப் பெற்றது புறாக்கள். ஏன் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்டு பணியாற்றியதும் புறாக்களின் கூடுதல் சிறப்பு. அனைத்து மத வழிபாட்டுத் தளங்களின் கோபுரம்தான் புறாக்களின் வாழ்விடங்கள். இப்படி சுத்திரமாக பறந்து திரியும் புறாக்களுக்கு பயிற்சி கொடுத்து பந்தயத்திற்கு அனுப்புவதும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. அப்படி சென்னையில் நடந்த பந்தயத்தில் விடப்பட்ட புறா ஒன்று மின்கம்பங்கள் மற்றும் செல்போன் டவர்களினால் ஏற்படும் காந்தவிசைகளால் திசை மாறி திண்டுக்கல்லில் தஞ்சம் அடைந்தது. புறாவைப் பறிகொடுத்து தவித்த ஒரு குடும்பத்தின் உண்மைக் கதைதான் இது.
 

dove photo

திண்டுக்கல் மாவட்டம் இன்னாசியார்புரம் என்ற குக்கிராமத்தில் உள்ள புஷ்பராஜ் என்பவரின் வீட்டருகே வந்தது திசை மாறித் திரிந்த அந்த புறா. அழகானப் புறாவைப் பார்த்தவர், அதற்கு உணவு அளித்து பத்து நாட்கள் வளர்த்து வந்திருக்கிறார். இவரது வீட்டிற்கு வந்த நெல்லையைச் சேர்ந்த சாந்தப்பன் என்பவர், புறாவைப் பற்றி விசாரித்திருக்கிறார். போன் நம்பரோடு கூடிய பேப்பர் காலில் கட்டியிருந்ததைப் பார்த்துவிட்டு, அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புறாவை உங்கள் வீட்டிலேயே வந்து ஒப்படைக்கிறோம் என்று சொன்னதும்தான் உயிரே வந்திருக்கிறது புறாவைப் பறிகொடுத்த முத்துவின் குடும்பத்திற்கு. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட நாமும், சாந்தப்பன் அவர்களோடு இந்தப் புறாக் காதலர்களை சந்திப்பதற்காக அக்கிராமத்திற்கே பயணமானோம்.
 

dove image

பந்தயப் புறாக்கள் வளர்ப்பவர்கள் என்றால் பெரிய பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்று பல கற்பனைகளோடு அக்கிராமத்தின் தெருக்களில் தேடினோம். பல மாடி வீடுகளை கடந்து வந்தபோது, ஒரு வீட்டின் அருகில் நின்று கொண்டு, அண்ணே ! இங்க வாங்க, இதுதான் நம்ம வீடு என்று புறா வந்த மகிழ்ச்சியில் நம்மை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார் முத்து. ஒரு சின்னஞ்சிறிய ஓட்டு வீட்டில் மிக மிக ஏழ்மையில் இருக்கும் குடும்பம் என்பது அப்போதுதான் தெரிந்தது. நாம் கொண்டு சென்ற புறாவைப் பார்த்த அவருக்கும், அவரது 5 வயது பையனுக்கும் அவ்வளவு பெரிய ஆனந்தம். இப்படித்தான் இந்த புறாக் காதலர்களிடம் அறிமுகமானோம்.சின்ன வயதில் கிளி, புறா, மைனா, நாய்க்குட்டி போன்று ஏதோ ஒரு பிராணிகளோடு கொஞ்சி விளையாட நாமும் ஆசைப்படுவோம். ஆனால் பல பெற்றோர்கள் வளர்க்க அனுமதிக்காததால், ஆசைகளை அடக்கி வைத்துவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விடுவோம். ஆனால் அந்த சின்னஞ் சிறிய ஆசைகளையும் நிறைவேற்றி வாழ்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த ஒருசிலரில் முத்து அண்ணனும் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம்தான் இந்தப் பேரன்புக்காரரின் சொந்த ஊர். 

ஆரம்பத்தில் காட்டு புறாக்கள் வளர்த்து வந்தவர், இப்போது பந்தயப் புறாக்களையும் வாங்கி வளர்த்து வருகிறார். கன்னியாகுமாரியில் புறாப் பந்தயங்களை நடத்தி வரும் ஆண்டனி ரேசிங் க்ளப்-ல் இணைந்து தனது புறாக்களையும் பந்தயத்தில் களம் இறக்குகிறார். முதலில் தோல்வி கண்ட புறாக்கள் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்றதும் உள்ளூரைத் தாண்டி வெளியூரிலும் களம் இறக்க ஆரம்பித்தார். முதலில் கயத்தாறு, திருமங்கலம், திருச்சி என்று ஆரம்பித்து சில வெற்றி, தோல்விகளைக் கண்டவர் பின்பு 600 கிலோமீட்டரைத் தாண்டி சென்னையில் புறாக்களைக் களம் இறக்கினார். சமீபத்தில் சென்னையில் நடந்த போட்டியில் சென்னையிலிருந்து விட்ட புறா, அஞ்சுகிராமத்தில் உள்ள தனது கூட்டிற்கு வந்து ஓவர் ஆல் சேம்பியன் மற்றும் முதல் இடத்தையும் தட்டிச் சென்றிருக்கிறது. புறாவோடு வாழும் முத்து அண்ணனிடமே அதைப்பற்றிக் கேட்டோம், “நெல்லை மாவட்டம்தான் எங்களது பூர்வீகம். தாத்தா காலத்திலேயே அஞ்சுகிராமத்துக்கு வந்துட்டோம். எங்க வீட்டுல கறவை மாடு வளக்குறதுதான் வழக்கம். நிறைய கறவை மாடு இருந்துச்சி. ஏன்னு தெரியல எனக்கு மட்டும் சின்ன வயசுல இருந்தே புறா’னா உசுரு. கன்னி போட்டு காட்டு புறாவைப் புடிச்சி வளத்துட்ருந்தேன். எனக்கு புறா மேல இருந்த ஆர்வம் படிப்புல இல்லாம போச்சி. அப்புறம் புறா வளத்தா வீட்டுக்கு நல்லதில்லனு சொல்லி சத்தம் போட்டாங்க. நான் சொன்ன பேச்சே கேக்கல. இதைப் பாத்து கடுப்பான எங்க அப்பா, என்னைய சென்னைக்கு வேலைக்கு அனுப்பிட்டாங்க. 15 வருசம் சென்னைலதான் வேலை பாத்தேன். ஆனா புறாக் கூட இல்லையேனு தினமும் கவலையாதான் இருக்கும். அப்புறம் கல்யாணம் பண்றதுக்காக ஊருக்கு வந்தேன். ஊருல அலையுற புறாவைப் பாத்தவுடனே பழைய நியாபகம் வர ஆரம்பிச்சிட்டு. மறுபடியும் புறா வளர்க்க ஆரம்பிச்சேன். 
 

dove man

முதல்ல காட்டு புறாதான் வளத்தேன். அப்புறம் ஒருசில புறா பந்தயத்தைப் பார்த்த பிறகு பந்தயப் புறா வாங்கி வளக்க ஆரம்பிச்சேன். 25,000 ரூபாய்க்கு கூட ஜோடி புறா வாங்கி வளத்துருக்கேன். ஆனா நான் இப்ப வளக்குறது ஹோமர் புறாக்கள் மட்டும்தான். நல்ல வேகமா பறந்து வரக் கூடிய புறா வகையில இதுவும் ஒன்னு. தினமும் இரண்டு மணி நேரம் வீட்டைச் சுத்தி ஆண் புறா தனியா, பெண் புறா தனியா பறக்க விடுவோம். ஆறு மாசம் கழிச்சி பத்து கிலோமீட்டர் தள்ளி உள்ள ஊர்ல கொண்டு பறக்க விட்டு, எங்க கூட்டுக்கு சரியா வந்து சேருதானு பாப்போம். இப்படிதான் பயிற்சி கொடுப்போம். இதுல சக்சஸ் ஆயிட்டுனா அப்புறம் போட்டியில இறக்க ஆரம்பிப்போம். இந்த நேரத்துல என்னோட மனைவிக்கு மனநிலை சரியில்லாத மாதிரி ஆயிட்டு. அதனால என்னோட இரண்டு பிள்ளைகளையும் எங்க அம்மாதான் பாத்துக்குறாங்க. புறா வளக்குறதுனால இந்த மாதிரி வாழ்க்கைல நடக்குற கஷ்டமான விசயங்கள்ல இருந்து என் மனசை தேத்திக்கிறேன். கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி கூட திருச்சியில இருந்து விட்ட புறா 3 மணி 40 நிமிசத்துல எங்க கூட்டுக்கு வந்து சேந்துட்டு. புறாவின் உணவுக்காக வருசத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல செலவாகுது. இதுக்கு ஸ்பான்சர் கிடைச்சா என்னோட புறா 1000 கிலோமீட்டர் பந்தயத்துல ஜெயிக்கிற அளவிற்கு கூட திறமையா வள்த்துருவேன். புறா பந்தயத்துல கலந்துக்கிட்டது மூலமா பழக்கமானவர், என்னைய நம்பி இன்னிக்கு ஒரு பேக்கரியையே ஒப்படைச்சிட்டு வெளிநாட்டுல இருக்காங்க. எந்த புறாவால படிப்பையும் வாழ்க்கையையும் தொலைச்சனோ, அதே புறாதான் வேலை வாங்கி கொடுத்து என்னைய வாழ வச்சிட்ருக்கு” என்று பெருமிதத்தோடு கூறுகிறார் முத்து அண்ணன். தங்களது ரேசன் கார்டில் புறாவின் பெயரில்லையே தவிர, புறாக்களோடு கூட்டுக் குடும்பமாகத்தான் வசிக்கிறார்கள் இவர்கள். எளிமையான ஓட்டு வீட்டில் வாழ்ந்து கொண்டு, தன் புறாவை 1000 கிலோ மீட்டரைத் தாண்டி பறக்க விட வேண்டும் என்ற கனவுகளோடு இருப்பது ஆச்சரியமானதும் கூட. கடைசியில் அவர் வேலை பார்க்கும் பேக்கரிக்கே அழைத்து சென்று அவர் கையாலேயே டீ போட்டு கொடுத்து வழியும் அனுப்பினார். மனிதர்களை நேசிப்பது மட்டும் காதல் அல்ல பறவைகளை நேசிப்பதும் காதல்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் முத்து என்கிற பேரன்புக்கு சொந்தக்காரர்.

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.