Skip to main content

தாய்ப்பால் கொடுத்தா அழகு போயிடுமா? - விளக்குகிறார் டாக்டர் கல்பனா

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Breast feeding tips - Dr Kalpana

 

தாய்ப்பால் கொடுப்பது குறித்த பல்வேறு தகவல்களை நம்மோடு டாக்டர் கல்பனா பகிர்ந்துகொள்கிறார்

 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுசேர்ப்பது தான் இதன் நோக்கம். குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு தாய்ப்பால் மூலம் வருகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான அத்தனை நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. தாய்ப்பாலுக்கான சரியான மாற்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. 

 

ஒருவருக்கு தாய்ப்பால் அதிகமாக சுரந்தால் அதை தாய்ப்பால் வங்கியில் வழங்கலாம். குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் என்பது மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் குழந்தைக்கு ஏற்படும் தொற்றுகள், குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கும். அதனால் தான் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசுகிறோம். தந்தையை விட தாயுடன் தான் குழந்தைகளுக்கு அதிகமான பிணைப்பு எப்போதும் இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக, இளம் தாய்மார்களுக்கு அந்தப் புரிதல் ஏற்பட்டுள்ளது. 

 

குழந்தைகளுக்கு முதல் நான்கு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால் அவர்கள் அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்குவர். குழந்தைகளுக்கு பாலூட்டுவதன் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். அவர்களுக்கு எலும்புகள் வலிமையாக இருக்கும். எனவே தாய்ப்பால் குழந்தைகளுக்கும் பயனளிக்கிறது, தாய்மார்களுக்கும் பயனளிக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு இதய நோய், கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 

பாலூட்டும் தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு தான். அதனால் தான் அந்தக் காலத்துப் பெண்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் ஏற்படாமல் இருந்தது. தாய்ப்பால் என்பது மிகவும் வீரியம் மிக்கது. அனைத்து குழந்தைகளுக்கும் இது கிடைக்க வேண்டும். தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கெட்டுவிடும் என்கிற தவறான நம்பிக்கை இங்கு இருக்கிறது. அது முழுக்க முழுக்க பொய்யான ஒரு விஷயம். தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் நாம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.