கல்வி என்பது என்னவென்பதை ஓர் அறிஞர் இப்படிக் கூறுவார். "கல்வி என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் ஒருமித்த வளர்ச்சி (Integrated Development) என்று". ஆனால் உட்கார்ந்து உணவருந்தக்கூட நேரமில்லாமல் கையேந்திபவன்கள் காளானாய்ப் பெருகிவிட்ட காலத்தில் இந்த மூன்றையும் எப்படி ஒருங்கே, சரியாய், முறையாய் வளர்ப்பது?
உடல்தான் உள்ளம் ஆன்மா அனைத்திற்கும் அடிப்படை. அதனால்தான் திருமூலர், "உடம்பால் அழியின் உயிரால் அழிவர், திடம்படு மெய்ஞானம் தேறவும் மாட்டார்" என்று கூறுவார். எனவே குழந்தைகள் ஞானத்தை, கல்வியைப் பெற வேண்டுமெனில், அவர்களுக்கு உடல் அதிமுக்கியம். அதற்கான முக்கியக் காரணியே உடற்பயிற்சி.
குழந்தைகளுக்கான உடற்பயிற்சிகள்
"ஆளும் வளரணும், அறிவும் வளரணும்
அது தான்டா வளர்ச்சி- உன்னை ஆசையோடு
ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி"
என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாடியிருப்பார்.
ஆனால், இன்று அறிவு வளர்ச்சி மட்டுமே போதும் என்று தங்கள் குழந்தைகளின் ஆள் வளர்ச்சியைப் பற்றி பெரும்பாலான பெற்றோர் கவலைப்படுவதே இல்லை. இங்கே ஆள் வளர்ச்சி என்று குறிப்பிடுவது எடை அதிகரிப்பு மட்டும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உடல்-எடை குறியீடு எனப்படும் Body Mass Index (BMI) சரியான அளவில் குழந்தைகளுக்கு இருத்தல் அவசியம். ஆனால், இங்கு சில இடங்களில் ஊட்டச்சத்து குறைபாடான குழந்தைகளையும், வேறு சில இடங்களில் அதிக எடையுள்ள குழந்தைகளையும் நாம் ஒருங்கே காண முடிகிறது. இந்த இரண்டுமேகுறைபாடுகளே. இதனை சரி செய்ய உடற்பயிற்சி ஓர் எளிய முறையாகும். குழந்தைகள் பிஞ்சுகள், அவர்களுக்கு என்ன பெரிதாய் உடற்பயிற்சி தேவைப்படும் என்று நினைப்பது நம்மில் பலரிடம் எழும் பொதுவான கேள்வியாகும்.
ஏன் வேண்டும் சிறுவர் சிறுமியர்க்கான உடற்பயிற்சி?
முன்பெல்லாம் பொழுதுபோக்கிற்காகவாவது குழந்தைகள் விளையாடினர். இன்றோ வீட்டுப்பாடம், தனிப்பாடப்பயிற்சி, சிறப்பு வகுப்புகள் என்று அவர்களுக்கு போக்குவதற்கே பொழுதில்லாத சூழ்நிலையில் எங்கே பொழுதுபோக்காய் விளையாடுவது? மேலும், இப்போதைய குழந்தைகள் வீடு, பள்ளி, தனிப்பயிற்சி என்று ஏதாவது ஒரு கூரையின் அடியிலேயே குடியிருக்கின்றனர். அவர்கள் வெளியே உலாவும் நேரமும் மிகமிகக் குறைவு. பாரதி பாடிய, "மாலை முழுதும் விளையாட்டு" என்று வழக்கப்படுத்திக்கொண்ட காலமெல்லாம் மலையேறிப்போனது. குழந்தைகள் மட்டுமல்ல; பெரியவர்களும் காலையும் மாலையும் வெளிக்காற்றில் உலாவி வருதல் கட்டாயம்.
"காலை மாலை உலாவி நிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டு
காலன் ஓடிப்போவானே" என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறுவார்.
வெளிக்காற்றை நுகர்தல் அவ்வளவு முக்கியம். ஆனால், பெற்றோரும் என் செய்வர்? இன்றைய மாசுபட்ட சூழலில், ஆக்சிஜன் அளவை விட கார்பன்-மோனாக்ஸைட், கார்பன்-டை-ஆக்ஸைட்களின் விகிதம் அதிகமாகிப் போன சுற்றுச்சூழலில் குழந்தைகளை வெளியில் விடவே பெற்றோர் பயப்படுகின்றனர். அவர்களைக் குறை சொல்லவும் இயலாது. பிறகு இதெற்கெல்லாம் என்ன தீர்வு, எப்படி உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்று ஆயிரம் வினாக்கள் நம்முன். அவற்றுக்கெல்லாம் விடை தேடும் முன், இப்போதைய குழந்தைகளை அதிகம் பாதிக்கும் குறைபாடுகள், நோய்கள் ஆகிவற்றை பட்டியலிடலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்
1. குழந்தைகளின் எடை சார்ந்த பிரச்சனைகள்
2. வளர்ச்சியின்மை
3. நினைவாற்றல் குறைபாடு போன்றவை.
அன்றாடப் பிரச்சனைகள்
1. மலச்சிக்கல்
2. ஒற்றைத்தலைவலி
3. மன உளைச்சல் போன்றவை.
இவையனைத்தையும் முழுமையாய் சரியாக்கவும் சிலவற்றை சமன் செய்யவும் உதவுவதே உடற்பயிற்சியின் குறிக்கோள். அடுத்த பகுதியில் உடற்பயிற்சிகள், அவற்றின் வகைகள், உடற்பயிற்சியின்போது குழந்தைகள் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி காண்போம்.