திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், மாமல்லபுரம் கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டி முடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் வகையில் இந்தக் கவிதை அரண்மனையைக் கட்டி முடித்துள்ளார் ஜெகத்ரட்சகன் எம்.பி. தமிழ் மரபுகளையும், கட்டட கலையையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த அரண்மனைக்கு ‘கால்டன் சமுத்ரா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
கால்டன் சமுத்ராவை வருகிற வியாழக்கிழமை (09.12.2021) காலை 9 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார். விழாவில் கலந்துகொள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்திருக்கிறார் ஜெகத்ரட்சகன் எம்.பி. இதற்காக, அனைவருக்கும் அழைப்பிதழ் தரப்பட்டிருக்கிறது.
விழாவிற்கான அழைப்பிதழில், ‘பல்லவன் காணாத பளிங்கு மாளிகை! கடலோரத்தில் கற்பனைக்கு விருந்தளிக்கும் கவிதை அரண்மனை! கல்லைக் கனிவித்த மல்லைக் கடற்கரையில் உள்ளம் மகிழ்விக்கும் உன்னத திறப்பு விழா! திங்கள் முடிசூடி, தென்றல் விளையாடி, பொங்கும் கடல்பாடி, பூரிக்கும் எல்லையிலேயே தங்கும் விடுதிகள்! கலையும் அலையும் கலந்து பேசும் திருக்கடல் மல்லையில் உங்கள் காந்தக் கனவுகளின் காவியமாய் மலர்கிறது.. கால்டன் சமுத்ரா! திறந்து வைப்பவர்.. திராவிடத்தின் திசைகள் அனைத்தையும் திறந்து வைத்திருக்கும் தீரர்.. தமிழக மக்கள் தவிக்கும் போதெல்லாம் விழி மூடாமல் உழைக்கும் வீரர்.. விரலசைவில் மக்களை காக்கின்றவர்.. விழியசைவில் சேனைகளை சேர்க்கின்றவர்.. குரலசைவில் கலைஞரை குவிக்கின்றனர்.. குணஅசைவில் தாய்போல் அணைக்கின்றவர்.. மின்னலாய் ஒளிரும் மேன்மைத் தலைவர்..
தங்கத் தமிழகத்தின் தாய்மொழியாய்த் திகழும் எங்கள் தளபதி.. முத்தமிழ் நாட்டை முதலிடத்தில் அலங்கரிக்கும் மான்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். வண்ணத்தமிழ் கொண்டு வாழ்த்தி மகிழுங்கள்” என்று கவிபாடி அனைவரையும் அழைத்திருக்கிறார் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.