Skip to main content

கலவி தெரியும்... கண்கலவி தெரியுமா? சொல்லேர் உழவு #5

Published on 25/05/2018 | Edited on 31/05/2018

ஆங்கிலத்தில் ஒரு சொல்லுருபை முன்பின்னாக ஒட்டி எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாவதைப் பார்த்தோம். தமிழில் அப்படி முன்பின்னாக ஒட்டி எப்படிச் சொற்களை உருவாக்குகிறோம்? அத்தன்மையை நன்கு விளங்கிக்கொள்ள எடுத்துக்காட்டுகளின் வழியே தமிழ்ச்சொற்களை அறிய வேண்டும். பிற மொழிகளில் பத்துச் சொற்கள் உருவாகின்ற இடத்தில் தமிழில் நூறு சொற்கள் உருவாகும். அந்நூறும் முடிவான கணக்கில்லை. மேலும் சொற்களை உருவாக்கிச் செல்லலாம். சொற்களைத் தோற்றுவிக்கும் மொழி வாய்பாடுகளை அறிந்திருந்தால் புதுச்சொற்களை யாரும் ஆக்கலாம்.
 

soller ulavu



தமிழில் ஒரு சொல்லொற்று எப்படியெல்லாம் புதுச்சொற்களை உருவாக்கிச் செல்கிறது என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டுக்குக் “கண்” என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். கண் என்னும் அச்சொல்லின் எளிய பொருள் என்ன? பார்ப்பதற்குப் பயன்படும் உடற்பகுதி. கண்ணால் பார்க்கிறோம். கண் என்பதற்கு அஃதொன்றே பொருளில்லை. மேலும் பல பொருள்கள் இருக்கின்றன. மரக்கணுக்களும் கண் என்றே கூறப்படும். மூங்கில், முரசடிக்கும் இடம், மூட்டுவாய், பெருமை, இடம், அறிவு, பற்றுக்கோடு, உடம்பு, அசை, உடலூக்கம் ஆகிய வேறு பல பொருள்களும் இருக்கின்றன. 

“தமிழில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள், ஒரு பொருளுக்குப் பல சொற்கள்” என்னும் தலையாய தன்மையை நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். அப்படிக்கொண்டால்தான் ஒரு சொல்லின் வெவ்வேறு பொருள் வாய்ப்புகளை நோக்கி நம் எண்ணம் நகர்ந்தபடியே இருக்கும். ஒரு பொருளுக்கு வழங்கப்படுகின்ற வெவ்வேறு சொற்களுக்கான தேட்டமும் வரும். 

இவ்விடத்தில் நாம் “கண்” என்பதற்கு வழங்கப்படுகின்ற “பார்க்கும் உடலுறுப்பு” என்னும் பொருளை எடுத்துக்கொள்கிறோம். அப்பொருள் வழியே நாம் ஆக்கிக்கொண்ட வெவ்வேறு சொற்கள் என்னென்ன ?

கண்ணில் ஒரு கட்டி வந்தால் அது “கண்கட்டி”. 

கண்ணைப் பொத்தினால் அது “கண்கட்டு”. 

நம் கண்ணை மறைக்குமாறு ஒரு வித்தையைச் செய்து ஏமாற்றி வியக்க வைத்தால் அது “கண்கட்டு வித்தை”. கண்ணைக் கட்டியதுபோல் ஏதோ செய்துவிட்டான். 

தேங்காய்க்குக் கண்கள் இருப்பதை அறிவோம். தேங்காயின் குடுமிப் பகுதியில் மூன்று துளைகள் இருப்பதைக் கண் என்றே வழங்குவர். கண்ணுள்ள அந்த மேல்மூடியைக் “கண்கயில்” என்பார்கள். கயில் என்றால் பற்றித் தூக்கும் பிடரிப் பகுதி. தேங்காயின் மேற்பகுதியில்தான் அதன் கண்பகுதி இருக்கும். அதனால் அதனைக் கண்கயில் என்றார்கள். 

கண்ணெதிரே கடவுளைப்போல் ஒருவர் தோன்றி நலம் செய்தால் அவரைக் “கண்கண்ட தெய்வம்” என்போம். தெய்வம் கண்ணுக்குத் தெரியாதது. அவரோ கண்ணால் காணும்படி எதிரே நிற்கின்ற தெய்வம். 

 

 


காதற்குறிப்போடு தலைவனும் தலைவியும் பார்த்துகொள்கின்ற பார்வைக்குக் “கண்கலவி” என்றே பெயர். “சைட் அடிக்கிறது” என்று பேச்சு வழக்கில் சொல்கிறார்கள். பார்த்து மகிழ்தல். கண்கலவி என்பது அதற்கு ஓரளவு பொருந்துகிறது. கண்கலவியில் இருதரப்பும் பங்கெடுக்கிறது. “சைட் அடிப்பது” ஒருதலையாக இருக்கலாம். 

காணத் திகட்டாத பார்வையின்பத்திற்குரியதைக் “கண்காட்சி” என்கிறோம். அந்தக் காட்சியானது பெரிதினும் பெரிதாக இருப்பின் அதைக் “கண்கொள்ளாக் காட்சி” என்கிறார்கள். 

ஒரு செயலைச் செய்வதற்கு ஏவுபவன் “கண்காட்டி”. நடந்துகொண்டிருக்கும் ஒரு செயலை மேற்பார்வையிடுபவன் “கண்காணி”. கண்ணால் காண்பதன் வழியே மேற்பார்வையிடுபவன். அந்தச் செயல் “கண்காணிப்பு”. கண்காணிப்புக்குத் தரும் கூலி “கண்கூலி”. 

நேரடியாகப் பார்த்ததைக் “கண்கூடாகக் கண்டேன்” என்று சொல்வார்கள். கண்கள் அந்தக் காட்சியில் கூடின என்பது பொருள். சினந்தால் அது “கண்சிவப்பு”. கண்சிவந்தால் மண்சிவக்கும். தூக்கத்திற்கு முன்னான நிலை “கண்சுழல்தல் அல்லது கண்சொக்குதல்”. கண்ணால் தெரிவிக்கும் குறிப்பு “கண்சாடை”. உறங்குவதும்கூட “கண்ணுறக்கம்.”

 

 


இச்சொற்களையும் சொற்றொடர்களையும் இயல்பாகப் பயன்படுத்திக்கொண்டிருந்த நமக்கு இப்போது அதன் தோற்றுவாய்த் தன்மையை உணர்ந்தவுடன் சற்றே வியப்பேற்படுகிறது. ஆம், ஒரேயொரு சொல்வேரைப் பயன்படுத்தி நாமும் பற்பல சொற்களை உருவாக்குகிறோம். நான் மேலே சொன்னவை கொஞ்சம்தான். இன்னும் பல சொற்கள் இருக்கின்றன. அப்படி உருவாக்கித்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். 

நாம் எடுத்துக்கொண்ட சொல்வேர் கண் என்பதால் அவையெல்லாம் நல்ல பயன்பாட்டில் உள்ளன. ஓரளவு அறிந்த சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் இருக்கின்றன. கண்கலவி, கண்கயில் போன்ற அருஞ்சொற்களும் கிடைத்தன. நாம் நன்கறியாத சொல்வேர்களும் பற்பல சொற்களை உருவாக்குகின்றன. அறியாத சொல்வேரை அறிந்தால் அங்கேயும் கொத்து கொத்தாக புதுச்சொற்களை அறிந்துகொள்ளலாம்.   

 

முந்தைய பகுதி:

ஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா?  கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #4 

அடுத்த பகுதி:

திருக்குறளில் உள்ள இந்த சொல், தமிழ்ச் சொல்லா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #6