இன்று எப்படி பழங்கால பொருட்களுக்கென்று தனி காட்சியகங்கள் இருக்கின்றனவோ அது போல காதல், கோபம், மகிழ்ச்சி என மனிதர்களின் உணர்வுகளெல்லாம் தனித்தனி காட்சி தேசங்களாக இருக்கின்றன. விரும்புகிறவர்கள் அந்தந்த தேசங்களுக்கு சுற்றுலா சென்று வரலாம். மூலா என்ற பெண், பிரிவு என்ற காட்சி தேசத்திற்கு செல்கிறாள். பிரிவு என்றால் என்ன என்பதை படிப்படியாக உணர்கிறாள், இது நிகழ்வது முப்பத்தோராம் நூற்றாண்டில். இது ஏதோ ஓ.டி.டியில் கோடிக்கணக்கான பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஆங்கில வெப் சீரிஸின் கதை அல்ல. கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘அம்பறாத்தூணி’ என்ற சிறுகதை தொகுதியில் இடம் பெறும் ஒரு கதை.
முப்பத்தோராம் நூற்றாண்டில் நிகழும் கதை எனில் இத்தொகுதி முழுக்க எதிர்காலத்தை பற்றியதோ என்ற எண்ணம் உங்களுக்கு வந்தால் பல ஆச்சர்யங்கள் இந்த தொகுதியில் காத்திருக்கின்றன. வள்ளி என்ற முதல் கதையே 1806 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சியின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது. பூலித்தேவன் வாசுதேவநல்லூரில் குலசேகரன் கோட்டையை எழுப்பும்போது நிகழும் ஒரு சம்பவம் கதையாக வருகிறது. இன்னொரு பக்கம் 1899 -ஆம் ஆண்டு மாஸ்கோ சிறையில் இருந்து தப்பிக்கும் மூன்று கைதிகளின் கதை சொல்லப்படுகிறது. அந்த கதையில் ஒரு சிறு பாத்திரமாக லியோ டால்ஸ்டாயின் மகன் செர்ஜி வருகிறார். 1876 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பஞ்சம் நேர்ந்தபோது அதை புகைப்படம் எடுக்க வந்த ஒரு அதிகாரியை கதாபாத்திரமாக வைத்து ஒரு கதை எழுதப்பட்டிருக்கிறது. அந்த கதையில் பேசப்படும் கடைசி வசனம் தன்மானத்தின் உச்சம்.
ஒருவன் தன் வாழ்வில் முதல் முறையாக பொய் சொல்ல வேண்டும் என்ற மிகச்சிறிய கருவை வைத்து ஒரு சிறுகதை எழுதியிருப்பது அசாதாரண முயற்சி. இரண்டாம் உலக போர் காலத்தில் மஞ்சவேலம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு ஜமீன்தார் பெண் பார்க்க போகும் கலகலப்பான காதல் கதையை முழுக்க முழுக்க வட்டார வழக்கில் எழுதியிருக்கிறார் கபிலன்வைரமுத்து. நகரத்தில் பிறந்து வளர்ந்த கபிலன் இந்த சமீந்தார் கதையில் தென்னை மரங்களைத் தாக்கும் காண்டாமிருக வண்டைப் பற்றி துல்லியமாக எழுதியிருப்பது தன் கதைகளுக்காக அவர் எல்லை கடந்து இயங்கியிருக்கிறார் என்பதற்கு சான்று. வரலாற்று கதைகளாக மட்டும் இல்லாமல் நிகழ்காலமும் இதில் இருக்கிறது. டெல்லி பல்கலைக்கழத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை எந்த வசனமும் இல்லாத ஒரு சிறுகதையாக பதிவு செய்திருக்கிறார். கார்டூன் பாத்திரங்களுக்கு தமிழில் குரல் கொடுக்கும் பின்னணி கலைஞர்கள், சினிமாவில் உதவி எழுத்தாளர்கள் என்று சமகால சாமானியர்களைப் பற்றியும் இந்த சிறுகதைத் தொகுதி பேசுகிறது.
ஆழ்கடல் சுரங்கம் பற்றிய கதை தமிழ் இலக்கியத்திற்கு புதுமை. அது கதாபாத்திரத்தின் காணொளி பதிவாக அமைக்கப்பட்டிருப்பது சிறுகதைக்குள் ஒரு நேர்த்தியான திரைக்கதை. இப்படி பன்முகமாக இருந்தாலும் மனித நேயமும் சமூக மனசாட்சியும் இந்த கதைகளின் அடிநாதம். “பகுத்தறிவு என்பது ஆன்மீகத்திற்கு மட்டுமே எதிரானது என்று பொதுப்புத்தியை இவர்கள் பரமாரிக்கும் வரை அது ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாறாது” என்றும் “நிலா - ஆழ்கடல் சுரங்கம் - மனிதர்களின் அந்தரங்கம் - இம்மூன்றும்தான் எதிர்கால உலக பொருளாதாரம்” என்றும் கதைகளுக்கிடையே சமூக அரசியலை போகிற போக்கில் ரத்தினச்சுருக்கமாக நெத்தி பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டு போகிறார் கபிலன்வைரமுத்து. ஒரு சில கதைகளில் வழக்கமான சிறுகதைகளுக்குரிய ஓட்டம் இல்லை. காரணம் கதையை முன் நிறுத்தாமல் கதாபாத்திரங்களை முன் நிறுத்தவே கபிலன்வைரமுத்து முயற்சி செய்திருக்கிறார். இந்த பாணி ஒரு சிலருக்கு பிடிபடாமல் போகலாம். மூத்த எழுத்தாளர்கள் சிலர் இந்த சிறுகதைத் தொகுதியை ‘இவை கதைகளே அல்ல’ என்று விமர்சிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அதையெல்லாம் மீறி நம் இளைய தலைமுறைக்கு இதை சொல்ல வேண்டும் என்ற கபிலன் வைரமுத்துவின் நோக்கமும், இந்த தொகுதி நெடுக இழைந்தோடும் மெல்லிய உணர்வுகளும் இந்த படைப்பை உயர்த்தி பிடிக்கும். அம்பறாத்தூணி என்றாலே அதை ராமனோடு இணைத்து பேசுவதையே சிலர் இலக்கிய வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் இந்த கதைகள் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட நம் மண்ணின் சில பெருமைகளைக் கொண்டாடுவதாலும் சில கதைகள் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான குரலாக அமைந்திருப்பதாலும் இதை இராவணனின் அம்பறாத்தூணி என்றே சொல்ல வேண்டும்.
புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருக்கும் அம்பறாத்தூணி கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதும் அதற்கான ஒரு குறியீடோ என தோன்றுகிறது. கவிதைகள், நாவல்கள் என்ற வரிசையில் இந்த புத்தகம் கபிலன்வைரமுத்துவின் பதினோராவது படைப்பு. இதற்கு முன் தொலைக்காட்சி பற்றி கபிலன் எழுதிய மெய்நிகரி என்ற நாவல் கவண் என்ற திரைப்படமாக வெளிவந்ததுபோல் அம்பறாத்தூணியின் கதைகளும் திரைவடிவம் பெற்றால் அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.