கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பின்னத்தூர் பர்வதவர்த்தினி உடனாய ராமநாதேசுவரர் மற்றும் அருணகிரிநாதர்- பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோவிலில் சென்னை மயிலாப்பூர் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 119-ம் ஆண்டு விழா மாநாடு, வெள்ளிக்கிழமை(21.6.2024) தொடங்கியது.
இதில் தமிழ்நாடு பவுண்டேசன் முதன்மைச் செயலாளர் இளங்கோ கொடியேற்றி தொடங்கி வைத்தார். சத்தியமூர்த்தி கொடிக்கவி ஓதினார். மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ் மண் சார்ந்த சைவ சித்தாந்த பெருமன்ற தலைவரும், சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவரும், பேராசிரியருமான நல்லூர் சா.சரவணன் அனைவரையும் வரவேற்று பேசுகையில் 'தமிழ் மண் சார்ந்த சைவ சித்தாந்த பாடத்தை முதன்மை பாடமாக கொண்டுவர அனைவரும் முயற்சிக்க வேண்டும்' என்றார்.
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் தலைமை தாங்கி சைவம் சித்தாந்தம் தொடர்பான 5 நூல்களை வெளியிட்டு பேசுகையில், “அறிவியல் சார்ந்த கருத்துக்கள் அதிகம் சைவ சித்தாந்தத்தில் பொதிந்து உள்ளது. குறிப்பாக அறிவியலில் முக்கியமாக கூறப்படும் 7 வகையான சக்திகள் சைவ சித்தாந்தத்தில் அடங்கியுள்ளது. சைவ சித்தாந்தம் மூலம் அறிவியல் தொழில் நுட்பமும் மேலும் முன்னேற வேண்டும். அத்துடன் சைவ சித்தாந்தம் தான் மக்களை மேம்படுத்தும் என்பதால் வெளியிடப்பட்ட நூல்கள் அனைத்தும் சமுதாயத்தை மேம்படுத்தும்” என்றார்.
தொடர்ந்து, பழனி ஆதீனம் குருமகா சந்நிதானம், சாது சண்முக அடிகளார் சின்னவேடம்பட்டி ராமானந்த குமரகுருபர அடிகளார், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர். மன்ற செயலாளர் கமல.சேகரன் , மன்ற செயற்குழு உறுப்பினர் தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிவ பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர் தொடர்ந்து 2-வது நாள் மாநாடு இன்று நடைபெறுகிறது.