தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையை அடுத்த புளியரையிலிருக்கிறது தமிழக - கேரளா எல்லைப் பகுதிகள். அண்மையில் உலக மக்களையும், உலக நாடுகளையும் அச்சுறுத்தலில் வைத்திருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழகத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர கர்நாடகாவில் முதியவர் ஒருவர் கரோனா தொற்றிக்குப் பலியாகியுள்ளார். அதேசமயம் கேரளாவில் கரோனா தொற்று 22 பேருக்குக் கண்டறியப்பட்டு அவர்கள் சிகிச்சையிலிருக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கரோனா தொற்றால் சிகிச்சையிலிருக்கிறார்கள். இந்த மாவட்டம் தமிழக பார்டரிலிருந்து மிகச் சுலபமான தொலைவிலிருக்கும் கேரள பகுதி.
மேலும் அன்றாடம் இரு மாநிலங்களிலிருந்தும் வாகனங்கள் பயணிகள் ஆயிரக்கணக்கில் எல்லைப் பகுதியைக் க்ராஸ் செய்கின்றனர். எனவே இவைகளனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக எல்லைப் புறத்திலமைந்துள்ள செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான மூன்று படுக்கைகளைக் கொண்ட சிறப்பு வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அரசு டாக்டர்களுடன் ஒரு சிறப்பு டாக்டர் மூன்று ஸ்பெஷல் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு வார்டு குறித்து தலைமை டாக்டரான ராஜேஷ்கன்னா சொல்லுவது எல்லைப் புறத்தை ஒட்டி நகரமிருப்பதால் கேரள மக்கள் அதிகம் வருவர். அதன் காரணமாக இந்த கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையிலும் யாரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. வரவில்லை இருப்பினும் வைரஸ் தொற்றுடன் யாரேனும் வந்தால் அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளுடன் நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாகப் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே போய்விட்டுத் திரும்பும் போது கட்டாயம் கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு நன்றாகக் கழுவிய பிறகே உணவு உட்கொள்ள வேண்டும். கைகளை சுத்தமாக வைந்திருந்தாலே வைரஸ் தொற்றிலிருந்து தப்பி விடலாம் என்கிறார்.