ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னையில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் 8 போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் பணப்பயன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு சார்பில் புதனன்று (ஜூன்.13) சென்னை பல்லவன் இல்லம் எதிரே மாநிலம் தழுவிய மாபெரும் தொடர் முழக்கப்போராட்டம் நடைபெற்றது.
ஓய்வு பெறும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதே தினத்தில் அனைத்து பணப்பயன்களையும் வழங்க வேண்டும், பஞ்சப்படி உயரும் போது அரசு ஓய்வூதியருக்கு வழங்கப்படுவது போல் பட்ஜெட்டில் நிதிஒதுக்கி பென்சன் வழங்க வேண்டும், அதே போல் மருத்துவ காப்பீடு, பஸ்பாஸ், மருத்துவப்படி வழங்க வேண்டும், கழக பென்சன் தாரர்களுக்கு இறப்பு நிதியாக ரூ 50 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற பின் ஏசிஎல் தொழிலாளர் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றவர்களுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரையை ஓய்வு பெற்றவர்களுக்கும் அமல்படுத்தவேண்டும், கிராஜூட்டி, கம்யூடேசன் வழங்க வேண்டும். 2018 வரைக்கான 141 விழுக்காடு பஞ்சப்படி உயர்வும் , 31 மாதநிலுவையும் வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் தேதியில் பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
ஓய்வூதிய கூட்டமைப்பின் தலைவர் நெ.இல.சீதரன் போராட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். என்.மகாலிங்கம் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.கர்சன், சிஐடியு சம்மேளனத்துணைத்தலைவர் ஏ.பி.அன்பழகன், மத்திய அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பு செயலாளர் ராகவேந்திரன், ராதா (பள்ளி,கல்லூரி ஆசிரியர் சங்கம்), நரசிம்மன் (பிஎஸ்என்எல் ஓய்வூபெற்றோர் சங்கம்), எம்.சண்முகம் (திருச்சி), மணிமுடி(சேலம்), சுரேந்திரன், செல்வராஜ் (கோவை), முத்துகுமாரசாமி (கும்பகோணம்), ஞானசேகரன் (தஞ்சை), ராமலிங்கம் (நாகை), இளங்கோ(புதுக்கோட்டை), பவுல்ராஜ் (காரைக்குடி), வெங்கடாச்சலம் (திருநெல்வேலி), ஆர்.சின்னசாமி(திருச்சி) பி.செல்வராஜ் பலர் வாழ்த்தி பேசினர்.