அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், கடைகள், வணிக நிறுவனங்களில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சேலம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி சேலம் மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கரோனா தொற்று நோய் பரவும் சூழல் ஏற்படும். கடைகளில் யாராவது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. நோய்த்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, சேலம் மாநகரப் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்துக் கடைகள், நிறுவனங்களும் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்கள், பணியாளர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையைப் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்.
நுழைவு வாயிலில் கை கழுவுவதற்கான வசதிகள், கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்திகரிப்பானை வைக்க வேண்டும். பொதுமக்கள் கைகளை சுத்தப்படுத்திய பிறகே கடைகளுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருவோரை அனுமதிக்கக் கூடாது. பணியாளர்கள் பணிகளை துவக்குவதற்கு முன்பு கண்டிப்பாகச் சுத்திகரிப்பான் மூலம் கைகளைக் கழுவ வேண்டும்.
வணிக நிறுவனங்கள், கடைகள் தங்களுடைய வளாகத்தில் தினமும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 1 சதவீதம் ஹைபோகுளோரைடு கரைசல் (30 லிட்டர் தண்ணீரில் கரைக்கப்பட்ட 1 கிலோ பிளீச்சிங் பவுடர்) அல்லது 2.5 சதவீதம் லைசால் (19 லிட்டர் தண்ணீரில் கரைக்கப்பட்ட 1 லிட்டர் லைசால்) கரைசலைக் கொண்ட கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட வேண்டும்.
தரை பகுதிகள், கழிவறைகள், பொதுமக்கள் கையாளும் அனைத்துக் கதவுகள், கைப்பிடிகள், மேசைகள், அமரும் நாற்காலிகள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட அனைத்துப் பயன்பாட்டுப் பொருள்களையும் கைத்தெளிப்பான்கள் மூலம் பரவலாகக் காற்றில் கலக்கும் வண்ணம் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
மாநகராட்சியால் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து வருவோரையும், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களையும் பணிக்கு அமர்த்தக் கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படக் கூடாது. பொதுமக்களுக்கு கரோனா தொற்று நோய்த் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தங்கள் வளாகப்பகுதியில் விழிப்புணர்வு விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
பணியாளர்களில் யாரேனும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த கடைகள், வளாகங்கள் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து ஒரு வார காலத்திற்கு மூடி வைத்திருக்க வேண்டும். தங்களின் வளாகத்தில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தும் பட்சத்தில், அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குளிர் சாதனத்தை 24 டிகிரி செல்சியஸூக்கு குறைவாக பயன்படுத்தக் கூடாது.
திருமண மண்டபங்கள், விழா அரங்குகளில் பண்டிகைக்கால கண்காட்சிகள் எதுவும் நடத்தக்கூடாது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கடைகள், வணிக நிறுவனங்களில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண், முகவரி பதிவேடு ஒன்றில் பதிவு செய்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.
கிருமி நாசினி கொள்முதல் செய்யப்பட்ட விவரம் மற்றும் அவற்றை தினசரி பயன்படுத்திய விவரங்கள் குறித்த பதிவேடு ஒன்று பராமரித்து, ஆய்வு மேற்கொள்ள வரும் சிறப்பு கண்காணிப்புக் குழுவினரிடம் காண்பிக்க வேண்டும்". இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.