Skip to main content

ஆடித்திருவிழா;  நாட்டியக் குதிரைகளின் ஆட்டத்துடன் பால்குடம் ஊர்வலம் 

Published on 27/07/2024 | Edited on 27/07/2024
Muthumariamman temple festival at Keeramangalam

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு வாரம் முன்பு ஞாயிற்றுக் கிழமை பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்குப் பொங்கல் வைத்துப் படையலிட்ட நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் ஆடிப் பெருந்திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் வழிபாடுகளும், வான வேடிக்கைகளுடன் மங்கல வாத்தியங்கள் முழங்கப் பக்தர்கள் புடைசூழ அலங்கார வாகனங்களில் அம்மன் வீதி உலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கீரமங்கலத்தில் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அன்னதான நிகழ்ச்சிகளும் நடக்கிறது. சனிக்கிழமை காலை டிரம்ஸ் இசைக்கலைஞர்களின் இசையோடு 5 நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாகப் பால்குடம் தூக்கிச் சென்று அம்மனுக்குப் பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 

Muthumariamman temple festival at Keeramangalam

இதில் குழந்தைகள் ஏராளமானோர் பால் குடம் தூக்கிச் சென்றனர். ஆங்காங்கே வான வேடிக்கைகளும் வண்ணக் காகிதங்களைப் பறக்கவிட்டும் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஆராவாரமாகச் சென்றனர். ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை பொங்கல் விழாவும், திங்கள் கிழமை மாலை தேரோட்டத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழாவைக் காண சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளம் கலந்து கொள்கின்றனர். திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசார் செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்