தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் ஸ்ரீசங்கரநாராயண சுவாமி உமாமகேஸ்வரி கோமதியன்னை அருள் பாலிக்கிற பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூன்று மிகப் பெரிய சன்னிதானங்களுடன் கூடிய சங்கரநாராயணர் ஆலயம் தென் மாவட்டத்தில் சிறப்புகளைக் கொண்டது.
ரத்தக் களறியாய் மோதிக் கொண்டிருந்த சைவ வைணவ பக்தர்களுக்கு, அரியும் சிவனும் ஒன்றே என்பதை உணர்த்த தன் உடலில் ஒரு பகுதி சங்கரராகவும் மறு பகுதி நாராயணராகவும் ஒருசேர உருவெடுத்து பக்தர்களுக்கு சிவபெருமான் திருக்காட்சி கொடுத்து ஒற்றுமைப்படுத்திய தலம் சங்கரன்கோவில். இந்த ஆலயத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம், சித்திரை பிரமோற்சவ திருவிழா வெகு விமரிசையாக 48 நாட்கள் நடைபெறுவது வழக்கம் அனுதினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில்.அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவது சிறப்பு.
சித்திரைத் திருநாளின் முக்கிய நிகழ்வாக நேற்றைய தினம் திருக்கோயில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி. இதையடுத்தே முக்கிய நிகழ்வுகள், விழா நடக்கும். யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு திருக்கோவிலிலிருந்து கோமளாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி அலங்காரத்துடன் பெருங்கோட்டூரிலுள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலுக்கு எழுந்தருளினார். பின்னர் சிறப்பு அலங்காரம். அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடந்தது. அதன் பின் மதியம் ஒரு மணிக்கு திருக்கோவில் யானை கோமதி அங்கு பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
யானை பிடிமண் கொடுத்த வரலாறு;
பரணி நதிக்கரையின் நெல்லையின் மேற்குப் புறமுள்ள மணலூரில் அரசாண்ட உக்கிரபாண்டிய மன்னர் அடிக்கடி மதுரை சென்று அன்னை மீனாட்சியையும் சொக்கநாதரையும் வழிபடுவது வழக்கம். சங்கரன்கோவிலிருந்த புன்னைவனத்தை காவல் காத்த காவற்பறையன் ஒரு தடவை அங்கிருந்த புற்றை அகற்றும் பொருட்டு வெட்டியபோது அதிலிருந்த பாம்பின் வால் அறுபட, புற்றினுள்ளே இருந்த சிவலிங்கத்தையும் கண்டார். அதே சமயம் மதுரை சென்று கொண்டிருந்த உக்கிரபாண்டியரின் யானை மேற்கொண்டு நகராமல் தன் கொம்பினால் தரையைக் குத்திக் கொண்டு புரள அது கண்டு மன்னர் புரியாமல் திகைத்தார். அதே சமயம் காவற்பறையனும் அரசரிடம் நடந்ததை தெரிவிக்க, பதற்றமாய் புன்னைவனம் வந்த மன்னர் சிவலிங்கத்தையும் வால் அறுபட்ட பாம்பினையும் கண்டார் அது சமயம் சங்கரனார் அசரீரியாய் ஆணையிட உக்கிரபாண்டிய மன்னர் புன்னைவனத்தை செம்மைப்படுத்தி கோயில் கட்டி சங்கரன்கோவில் ஊரையும் தோற்றுவித்திருக்கிறார். யானை கொம்பினால் குத்திய இடம் பெருங்கோட்டூர் என்று உருவானது.
இதையடுத்தே சித்திரை மாதத்திலே இறைவனைக் காண காரணமாயிருந்த பெருங்கோட்டூர் சென்று யானை மூலம் பிடிமண் எடுத்து தரவைத்து அதனைக் கொண்டு வந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்து வழிபட்டார். அந்த அரிய அதிசய நிகழ்வே சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.