கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா முதன்முதலில் பரவ ஆரம்பித்ததாகக் கருதப்படும் சீனாவின் வுஹான் நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைச் சீனா மறைப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும், ஊடகங்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் வுஹான் நகரில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது சீனா. மொத்த பலி எண்ணிக்கையில் 1,290 மரணங்களை கூடுதலாகச் சேர்த்துள்ளது சீனா. இதனையடுத்து அந்நகரில் பலி எண்ணிக்கை 3,869 ஆக உள்ளது.
பல நோயாளிகள் குறித்த தகவல்கள் தவறாகத் தெரிவிக்கப்பட்டதால், இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. வுஹானில் கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டிருந்த கடைசி மருத்துவக்குழு நேற்று தங்களது பணிகளை முடித்த நிலையில், சீனா இந்தப் புதிய எண்ணிக்கையை அறிவித்துள்ளது.