தண்ணீருக்குப் பயந்து 60 வருடத்துக்கு மேல் குளிக்காமல் இருந்த உலகின் அழுக்கான மனிதர் திடீரென உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரான் நாட்டின் தெற்கு மாகாணத்தில் பார்சில் என்னும் பகுதியில் தேஜ்கா என்ற ஒரு சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அமாவு ஹாஜி என்பவர் வசித்து வந்தார். இவர், தண்ணீருக்குப் பயந்தும் எங்க நாம குளித்து தூய்மையாக இருந்துவிட்டால் ஏதாவது நோய் வந்துவிடும் என்ற காரணத்தினாலும் பல ஆண்டுகளாகக் குளிக்காமலே வாழ்ந்து வந்துள்ளார். அதாவது 60 வருடத்துக்கும் மேலாக குளிக்காமல் இருந்த அமாவு ஹாஜி உலகின் அழுக்கு மனிதர் என்றும் பெயர் எடுத்தார். இதனாலேயே, அந்த ஊர் மக்கள் அமாவு ஹாஜியைத் தனிமைப்படுத்தி இருக்கின்றனர்.
மேலும், சூடான உணவு சாப்பிட்டால் நோய் வந்துவிடும் என்ற பயத்தில் பாலைவனத்தில் இருக்கிற அழுகிய முள்ளம்பன்றிகளைச் சாப்பிட்டு வந்துள்ளார். ஆரோக்கியமாக இருப்பதற்காக தினமும் 5 லிட்டர் தண்ணீரைத் துருப்பிடித்த இரும்பு கேனில் குடித்து வந்துள்ளார். அமாவு ஹாஜிக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருப்பதால் மாட்டுச்சாணத்தில் செய்த சிகரெட்டுகளை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு அமாவு ஹாஜி குறித்து 'THE STRANGER LIFE OF AMOU HAJI' என்ற ஆவணப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.
இதைப் பார்த்த தேஜ்கா கிராம மக்கள் அமாவு ஹாஜியின் வாழ்க்கை போக்கை மாற்றவும் அவரை குளிக்க வைக்கவும் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளனர். ஆனால், அது முடியாத காரணத்தினால் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமாவு ஹாஜியை குளிக்க வைத்துள்ளனர். இந்த தகவலை ஈரான் நாட்டு உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்டு இருந்தது.
இதனையடுத்து, 60 ஆண்டுகளுக்கு மேல் குளிக்காமல் நல்ல உணவைச் சாப்பிடாமல் வாழ்ந்து வந்த அமாவு ஹாஜி, அவர் குளித்த ஒரு சில மாதங்களிலேயே உயிரிழந்துள்ளார். கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியன்று, அமாவு ஹாஜி அவரது 94 வயதில் உயிரிழந்தார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகிறது.