கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு 7,500 கோடி ரூபாய் நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது.அதிகபட்சமாக இத்தாலியில் 13,915, ஸ்பெயினில் 10,348, அமெரிக்காவில் 6,070, பிரான்சில் 5,387 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.மேலும், 2,12,018 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார். இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு 7,500 கோடி ரூபாய் நிதி வழங்க உலகவங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கி 25 நாடுகளுக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டாலரை அவசரக்கால நிதியாகக் கொடுத்து உதவ உள்ளது.இதில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகவங்கி ஒதுக்கியுள்ள இந்த நிதி, கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குச் செலவிடப்பட உள்ளது. இந்தத் தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்விதமாக அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர் வரை உலகநாடுகளுக்கு நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது