தந்தை பெரியாரின் பிறந்த நாள் கடந்த 17-ஆம் தேதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. அமெரிக்க வாழ் தமிழர்கள், பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு (கரோனா காரணாமாக) 'சூம்' செயலியில் சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தினர்.
இந்தப் பேச்சுப் போட்டி செப்டம்பர் 20 ஆம் நாள் நடந்தது. 'பெரியார் பன்னாட்டு மய்யம்' ஒரே நேரத்தில் மூன்று 'சூம்' அரங்கங்கள் அமைத்து போட்டியை நடத்தியது. மூன்று நடுவர்கள் - மூன்று ஏற்பாட்டாளர்கள். அமைதியாக, அழகாக நடந்தது. 5, 6, 7 வயதினர் ஒரு பிரிவில். 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மழலைக் குரல் ஆனால் முத்திரை கருத்துகளை "பெரியார் தாத்தாவை ஏன் எனக்குப் பிடிக்கும்" என்று வார்த்தைகளாலும், உடல் அசைவுகளாலும் விளாசினார்கள்.
8, 9, 10 வயது பிரிவில், 30க்கும் மேற்பட்டோர். ஆரம்பமே அழகு. "உலகப் பகுத்தறிவாளர்களுக்கு வாழ்த்து" என்று தொடங்கி, "நேரத்தை வீணடிப்பவரைப் பிடிக்காது, அதனால் பெரியார் தாத்தாவைப் பிடிக்கும், முட்டாளைப் பிடிக்காது, அதனால் பெரியார் தாத்தாவைப் பிடிக்கும். பெண்ணடிமை பிடிக்காது, அதனால் பெரியார் தாத்தாவைப் பிடிக்கும் என்று வரிசையாகச் சொல்லி, இவ்வளவும் செய்தவரைப் பிடிக்காமல் இருக்குமா? வாழ்க பெரியார் என்று முடித்தனர் .
"பெரியார் இன்று ஏன் தேவை" என்ற தலைப்பில் 11 வயதிற்கும் மேற்பட்டோர், ஒவ்வொருவரும் சிறந்த மேடைப் பேச்சாளர்கள்போல் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்காவிலுள்ள கறுப்பினப் போராட்டம் என்று விளாசித் தள்ளி விட்டனர். நடுவர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினமாகி விட்டது! பரிசுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது!
இவர்கள் கட்டாயம் எதிர்காலத்தில் பெரியார் தொண்டர்கள் மட்டுமல்ல, இங்குள்ள தலைவர்களாகவும் வருவார்கள் என்பதில் அய்யமில்லை! கருத்தும், பேசிய முறையும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இங்கு பிறந்த பிள்ளைகள் இவ்வளவு அழகாகத் தமிழ் பேசியது இங்கு முப்பதாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பள்ளி தொடங்கியதின் பலனை அறுவடை செய்த மகிழ்ச்சி! அனைவரும் ஆங்காங்கே தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாண வர்களே! ஆங்கிலத்தில் பேசியவர்களும் கருத்துகளைத் தெளிவாக எடுத்து வைத்தனர்!
இடைவேளைக்குப் பின் பரிசளிப்பு விழாவைப் பறை இசை முழங்கி சிறுவர்கள் தொடங்கி வைத்தார்கள். அறிவுப் பொன்னி நிகழ்ச்சியை நடத்தினார். அமெரிக்காவின் மறைந்த பெண்ணிய, சம உரிமைப் போராளி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ரூத் பேடன் கின்சுபர்க் அவர்களின் மறைவிற்கு, நினைவேந்தலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிறுவர் குழுவினர் புரட்சிக் கவிஞரின் "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து"ப் பாடலைப் பாடினார்கள். முதல் பரிசு பெற்றவர்கள் பேசி பரிசைப் பெற்றுக் கொண்டனர். அமெரிக்காவின் நீண்ட காலப் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் பன்னாட்டமைப்பு பொறுப்பாளருமான வ.ச.பாபு நன்றி உரை ஆற்றினார். அமெரிக்காவில் பெரியார் வாழ்கின்றார்! வாழ்வார்!
-சோம. இளங்கோவன்