அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களால் வெள்ளை மாளிகையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீஸார் கொன்றதால் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மினசோட்டா தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் எனும் நபர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்தார்.
விசாரணைக்காக ஜார்ஜ் காரை விட்டு இறங்காததால், அவரை வெளியே இழுத்த போலீஸார், அவரை கீழே தள்ளி கைகளின் விலங்கை மாட்டியுள்ளனர். அப்போது ஒரு காவலர், ஜார்ஜின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து கடுமையாக அழுத்தியுள்ளார். இதனால் சுவாசிக்க முடியாமல் தவித்த ஜார்ஜ், "என்னால் மூச்சுவிட முடியவில்லை, என்னைக் கொன்றுவிடாதீர்கள்" என போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் இதனை காதில் வாங்காத அந்த காவலர், தொடர்ந்து சுமார் எட்டு நிமிடங்கள் அவரது கழுத்தைக் காலால் அழுத்திக்கொண்டே இருந்துள்ளார். இதனால் ஜார்ஜ் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் வெளியாக அந்நாட்டின் பல இடங்களில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போராட்டங்கள் பல இடங்களில் தற்போது கலவரங்களாக மாறியுள்ளன. பல பல்பொருள் அங்காடிகள், கடைகள், கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல மாகாணங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இதனைக் கட்டுப்படுத்த போலீஸார் திணறி வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள்ள வெள்ளைமாளிகை அருகே போராட்டக்காரர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு வெள்ளைமாளிகையின் அருகில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்பு நடவடிக்கைக்களுக்காக வெள்ளைமாளிகை விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போலீஸார் கலைக்க முயன்றனர்.