தென்கொரியா, வடகொரியா இடையே பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில் தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
தென்கொரியா உடனான உறவை முறித்துக்கொள்வதாக அண்மையில் வடகொரியா அறிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவிவருகிறது. பல ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த இந்த இரு நாடுகளும் கடத்த சில ஆண்டுகளாக நட்பு பாராட்டி வந்தன. இந்நிலையில், அண்மையில் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மீண்டும் விரிசல் விழ ஆரம்பித்தது. தங்கள் நாட்டிலிருந்து தப்பிய சிலர் தென்கொரியாவில் இருந்துகொண்டு துண்டுப் பிரசுரங்கள் மூலமாகத் தங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருவதாக வடகொரியா அண்மையில் குற்றம் சாட்டியது. மேலும், கிம் ஜாங் உன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவிலிருந்து ஹீலியம் பலூன்களைப் பறக்கவிடுவதாகவும், வடகொரியாவின் சில ரகசியத் தகவல்கள் தென்கொரியா வாயிலாகக் கசிவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வடகொரியா சுமத்தியது.
இதனையடுத்து, இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் வடகொரியா ராணுவம் நுழையலாம் என எச்சரித்த கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், பேச்சுவார்த்தைக்காகச் சிறப்புத் தூதர்களை அனுப்பும் தென் கொரிய அதிபரின் யோசனை முட்டாள்தனமானது எனவும் விமர்சித்தார். இந்தச் சூழலில், இருநாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருந்த பொதுவான தகவல் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா வெடிகுண்டு வைத்துத் தகர்த்தது. இதனைத்தொடர்ந்து கொரிய எல்லையில் உள்ள டைமண்ட் மவுண்டன் ரிசார்ட் மற்றும் கைசோங் பகுதியில் வட கொரிய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், "தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில் காணொளிக்காட்சி வழியாக கொரிய ராணுவ ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாட்டின் ராணுவம், போர் தடுப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்கொரியா உடன் நிலவும் பதட்டத்தைக் கருத்தில் கொண்டு அந்நாட்டிற்கு எதிரான ராணுவ நடவடிக்கை திட்டங்களை ஒத்திவைக்க கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.