அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சில தனிப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளைப் பற்றி அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எழுதிய புத்தகத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என அமெரிக்க அரசு நீதிமன்றம் சென்றுள்ளது.
முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில், 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தன்னை வெற்றிபெற வைக்கச் சீனா உதவ வேண்டும் என ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் ஜின்பிங்கிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டிற்குப் பின், அமெரிக்காவின் விவசாயப் பொருட்களைச் சீனா அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும் எனவும் ஜின்பிங்கிடம் ட்ரம்ப் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல உய்குர் முஸ்லிம்களைப் பெருமளவில் காவலில் வைப்பதற்காகச் சீனா வதை முகாம்களைக் கட்டுவதாகக் கடந்த ஆண்டு ட்ரம்ப்பிடம் ஜின்பிங் கூறியபோது, ட்ரம்ப் அதற்கு ஆதரவான கருத்தைக் கூறினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் அதிகாரபூர்வமாக அடுத்த வாரம் வெளியாக உள்ள சூழலில், புத்தகத்தின் ஒரு பகுதி வால்ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க அரசியலில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. போல்டனின் இந்தக் குற்றசாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ள அதிபர் ட்ரம்ப், "அவர் ஒரு பொய்யர்" எனவும் விமர்சித்துள்ளார். மேலும் இந்தப் புத்தகத்திற்குத் தடை கோரி அமெரிக்க அரசு நீதிமன்றத்தை நாடி உள்ளது.