Skip to main content

பிரதமரிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தல்; வெள்ளை மாளிகை கண்டனம்!

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

White House condemned the threat to the journalist who questioned pm modi

 

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார்.  அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன், செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடியிடம், வால் ஸ்ட்ரீட் ஜெனல் பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கி, “உங்கள் அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதனால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

 

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “ஜனநாயகம் எங்கள் ரத்தத்திலும், உணர்விலும் உள்ளது. எங்கள் அரசியல் சாசனத்தில் எங்கள் முன்னோர்கள் ஜனநாயகத்தை ஊக்குவித்துள்ளனர். அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ள ஜனநாயக விதிமுறைகளை எனது அரசு பின்பற்றுகிறது. இதில் ஜாதி, இன, மத ரீதியாக எந்த பாகுபாட்டையும் நாங்கள் பார்ப்பதில்லை. மனித நேயம், மனித உரிமைகளுக்கு மதிப்பில்லை என்றால், எந்த நாட்டையும், ஜனநாயக நாடு என அழைக்க முடியாது. இந்தியாவை ஜனநாயக நாடு எனக் கூறும்போது, பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கை அடிப்படையில்தான் இந்தியா முன்னேறுகிறது. இந்தியாவின் ஜனநாயக விதிமுறைகளில் ஜாதி, மத ரீதியான பாகுபாடு இல்லை” எனப் பதிலளித்தார். 

 

இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கி எதிராக சமூக வலைத்தளங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை கடுமையாக கண்டித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்; பத்திரிகையாளர் மீதான இந்த அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

 

இதனிடையே பிரதமரின் அமெரிக்க பயணம் தொடர்பாக முன்னாள் அதிபர் ஒபாமா, “எனக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பேன்” எனக் கூறியுள்ளார். இதற்கு பாகஜவினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.