உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அதிக அளவு கரோனா பரிசோதனைகளைச் செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.39 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.91 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 82.67 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனிடையே, பல நாடுகளில் முறையான மற்றும் அதிக அளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதே கரோனா பரவல் மோசவடைவதற்கான காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதனைச் சுட்டிக்காட்டி, அமெரிக்கா அதிக கரோனா பரிசோதனை செய்வதே அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதற்கான காரணம் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அதிக அளவு கரோனா பரிசோதனைகளைச் செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி, “அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரிசோதனைகள் 4.2 கோடிக்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. உலகளவில் அமெரிக்காவில் தான் இவ்வளவு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கடுத்து இந்தியாவில் 1.2 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.