சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். 2வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தான் பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார்.
டொனால்ட் டிரம்ப்போடு, ஜே.டி.வானஸ் என்பவர் துணை அதிபராக வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். உலகின் தலைசிறந்த நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
அந்த வகையில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தலைவர்காளுடன் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அதிபர் பதவியேற்பு விழாவின்போது டொனால்ட் டிரம்ப் உறுதிமொழியேற்கும் பைபிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவரது மறைந்த தாய் கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் ஆகியவற்றின் மீது உறுதிமொழி எடுக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் பதவியேற்ற போது, ஆப்ரகாம் லிங்கனின் பைபிளை கொண்டு பதவியேற்றார். அமெரிக்கா அதிபர்களின் பதவியேற்பு விழாக்களின் போது நீண்ட காலமாக பைபிள் மீது உறுதிமொழி எடுக்கம் வழக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.