Skip to main content

‘ஹமாஸுடன் போர் நிறுத்தம்’ - இஸ்ரேல் ஒப்புதல்!

Published on 17/01/2025 | Edited on 17/01/2025
Israel approved israel gaza incident end

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வந்த போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனிடையே பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருந்தது. அதே சமயம் போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இருப்பினும் இரண்டு பேரும் அதற்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக்கொண்டே வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் காரணமாக, 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 150க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் தற்போது வரை ஹமாஸின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர்.

இந்த சூழலில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ட்ரம்ப், “நான் பதவி ஏற்பதற்குள் பிணையக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வரலாற்றில் இதுவரை கண்டிராத பாதிப்பை ஹமாஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்திருந்தனர். போர் நிறுத்தத்தைத் தொடர்ந்தும், ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் தந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் வரும் ஞாயிறுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் கடந்த 2023இல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 15 மாதத்துக்குப் பின் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்