ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிவாடி பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(35). இவருக்குத் திருமணமாகி அரவிந்த் என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அஞ்சு சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா (29) என்பவருடன் பேஸ்புக்கில் நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் தேதி அன்று தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுத் தனது பாகிஸ்தான் நண்பரைச் சந்திக்கச் சுற்றுலா விசா மூலம் வாகா எல்லை வழியாகப் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அப்போது, பாகிஸ்தான் அப்பர்திர் மாவட்டக் காவல்துறையினர் அங்கு வந்த அஞ்சுவிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர், தனது நண்பரைச் சந்திப்பதற்குப் பாகிஸ்தான் வந்ததாகக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, அஞ்சுவிடம் இருந்த பயண ஆவணங்களான பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால், அஞ்சு மீது நடவடிக்கை எடுக்காமல் பாகிஸ்தான் காவல்துறையினர் அவரை விடுவித்தனர். அஞ்சு தற்போது, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அப்பர்திர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லா வீட்டில் இருக்கிறார்.
இதனையடுத்து பாகிஸ்தான் இளைஞரைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தான் அஞ்சு இந்தியாவில் இருந்து சென்றுள்ளார் என்ற செய்திகள் பரவியது. இந்த நிலையில், பரவி வரும் செய்திக்கு நஸ்ருல்லா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “அஞ்சு பாகிஸ்தான் வந்துள்ளார். எங்களுக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. கூடிய விரைவில் அவரது விசா காலாவதியாவதால் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அஞ்சு இந்தியா திரும்பிச் செல்லுவார்” என்று தெரிவித்துள்ளார்.