மூன்று வருடங்களுக்கு மேலாகியும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் திணறிக் கொண்டிருப்பதாக 'கதை' பண்ணிக் கொண்டிருக்கிறது நம்மூர் போலீஸ். ஆனால் 32 வருடத்திற்கு முன்பு 12 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொலைகாரனை கைது பண்ணி தண்டனை பெற்றுத்தந்திருக்கிறது அமெரிக்க போலீஸ்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது... ஒரு ரெஸ்டாரண்டின் டாய்லெட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின் 32 வருடங்களுக்குப் பிறகு ஒரு கொலை குற்றவாளியை அடையாளம் காட்டியது. கடந்த, வெள்ளிக்கிழமை அமெரிக்காவிலுள்ள பியர்ஸ் கவுண்டி நீதிமன்றத்தில் குற்றவாளியான 66 வயதுடைய சார்லஸ் ஹார்ட்மேன் என்பவனுக்கு நீதிபதி தண்டனை விவரங்களை அறிவித்தார். 32 வருடங்களுக்கு முன்பு... அதாவது 1982ல் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில், டகோமா மாவட்டம், புகெட் என்ற இடத்திலுள்ள பூங்காவில் மிட்செல்லாவெல், மிட்செல்லரோட் ஆகிய இரு சகோதரிகளும் சைக்கிளில் சென்று விளையாடிக் கொண்டிருக்கையில் மிட்செல்லாவெலுக்கு பசி வந்ததால் தங்கையை விட்டு விட்டு வீட்டுக்கு சாப்பிடச்சென்றார். சாப்பிட்டு முடித்து அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தங்கையான மிட்செல்லாரோட்டை காணவில்லை. அவருடைய சைக்கிள் மட்டுமே பூங்காவில் கிடந்தது. போலீஸ் வந்து விசாரணை நடத்தியபோது பூங்காவிலிருந்து 1 மைல் தூரத்தில் காட்டுப்பகுதியில் 12 வயதே ஆன மிட்செல்லாரோட் கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டுக்கிடந்தாள்.
இந்த கொடூர கொலையை கண்டுபிடிக்க போலீஸ் பல தடையங்களையும் சேகரித்து ஆராய்ந்ததில் எந்த குற்றவாளியையும் கைது செய்ய முடியவில்லை. காரணம் எந்த தடயமும் மாநில, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்திலுள்ள தடையத்துடன் ஒத்துப் போகவில்லை. இந்நிலையில், கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் டாய்லெட்டிருந்து மீட்கப்பட்ட நாப்கினையும் கிரைம் சீன் எவிடென்ஸ் லிஸ்டில் போலீஸ் வைத்திருந்தது. நாப்கினில் உள்ள கறைகளை தற்போதுள்ள அதிநவீன டி.என்.ஏ. புரொபைல் உதவியுடன் ஆராய்ந்ததில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் உள்ள பழைய குற்றவாளியான சார்லஸ் ஹார்ட்மேனின் டி.என்.ஏ வுடன் ஒத்துப்போனது. இதனால், அவனை போலீஸ் பல வாரங்கள் ரகசிய தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து கைது செய்ததோடு கடந்த வெள்ளிக்கிழமை அன்று பியர்ஸ் கவுண்டி நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தந்துள்ளது. அமெரிக்க போலீஸிடம் குற்றவாளியும் 32 வருடங்களுக்கு முன்பு 1982ல் சிறுமி மிட்செல்லா ரோட்டை கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளான். குற்றவாளி மீது முதல் டிகிரி கொலை குற்றமும் கூடுதலாக கற்பழிப்பு குற்றமும் சுமத்தப்பட்டுள்ளதால் மரணதண்டனை நிச்சயம் என்கின்றனர். தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். தடயங்களும் நின்று கொல்லும்!
- கே.மணிஷா