வெனிசுலாவில் புதிய அரசியல் அமைப்பிற்கு எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அரசியல் அமைப்பு சட்ட அவையை அமைக்கும் வகையில் தேர்தல் ஒன்றை அதிபர் நிக்கோலஸ் மதுரோ நடத்தினார். இந்த தேர்தலில் தாம் வெற்றி பெற்றதாக அவரே அறிவித்து கொண்டார். உள்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், எதிர்கட்சிகள் பெரும்பான்யைாக உள்ள நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை குறைத்து தமது அதிகாரத்தை பலப்படுத்த அதிபர் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகரான கராகஸ் நகரில் அதிபரின் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் அவர்களை கலைக்க முயன்றபோது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.