கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சை மூலமாகவே குணமடைந்துள்ளதாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் பேசியுள்ள நிலையில்,இது தவறான தகவல் என இளவரசரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார். சர்வதேச அளவில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. 2,12,018 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸை ஆயுர்வேத மருந்துதான் குணப்படுத்தியது என மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
வியாழக்கிழமை கோவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், "பெங்களூருவில் சவுக்கியா ஆயுர்வேத ரிசார்ட்டை நடத்தி வரும் டாக்டர் ஐசக் மத்தாயிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மூலம் இளவரசர் சார்லஸுக்கு அவர் அளித்த சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக அவர் என்னிடம் கூறினார். இளவரசர் சார்லஸ் தற்போது கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.