அமெரிக்க தலைநகர், வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் காரணமாக, அதிகாரப்பூர்வமாக பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி ஆறுமணி நேரம் தடைப்பட்டது. ட்ரம்பின் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து மீண்டும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடந்து வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு ஜோ பைடன், ஒபாமா, போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என ஆதரவாளர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப், மைக் பைனஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வன்முறை தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த நிலையில் அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் 12 மணி நேரத்துக்கு முடக்கப்பட்ட நிலையில், ட்ரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு 24 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது.