ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டை எடுக்க பைடன் அரசு வலியுறுத்தும் என அமெரிக்கத் தூதரக அதிகாரி டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்தைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தியும், ரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெறக் கோரியும் ஐநா பொதுச் சபையின் அவசர கால அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பு நாடுகளில், 141 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. ரஷ்யா, சிரியா, பெலாரஸ், வட கொரியா, எரித்ரீயா ஆகிய ஐந்து நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 35 நாடுகள் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. இந்தியா ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்துவரும் நிலையில், இது ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளதாக மேற்குலக நாடுகளில் கருத்து எழுந்து வருகிறது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய அமெரிக்கத் தூதரக அதிகாரி டொனால்ட் லூ, "அமெரிக்க வெளியுறவுச் செயலர் அந்தோனி பிளிங்கன், அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் இந்த போர் தொடர்பாக இந்தியாவுடன் இடைவிடாத உயர்மட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா தனது நிலைப்பாட்டை விளக்க முயற்சிக்கும் போது இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. ஒன்று, இந்த மோதலுக்குப் பேச்சுவார்த்தை வாயிலான தீர்வுக்கான சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து முன்வைக்கிறது. மற்றொன்று, இன்னும் 18,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து அவர்களைப் பாதுகாக்க முயல்கின்றனர்
ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க இந்தியாவை வலியுறுத்துவதற்காக நாங்கள் அனைவரும் பணியாற்றி வருகிறோம். ஒற்றுமையான முடிவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும், ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க வெளியுறவுத் துறை இந்தியாவுடன் பேசி வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்குத் தேவையான உதவி பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது. இதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது முக்கியமான ஒரு செயல்பாடு. இந்தியா நேரடியாக ரஷ்யாவை விமர்சிக்கவில்லை என்றாலும், ஐநா கூட்டத்தில் பேசுகையில், 'ஐநா உறுப்பு நாடுகள் அனைத்தும் மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை மதிக்க ஐ.நா. சாசனத்தை கடைபிடிக்க வேண்டும்' என்றது. இதன்மூலம் உக்ரைனின் இறையாண்மையை ரஷ்யா மீறுகிறது என்பதை இந்தியா உணர்ந்திருப்பது தெரிகிறது" என்றார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச்சபை ஆகிய இரண்டிலும் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில், அமெரிக்கத் தூதரக அதிகாரியின் இந்த பேச்சு மூலம் அமெரிக்கா இந்தியாவை தன் பக்கம் சேர்த்துக்கொள்வதற்குத் திட்டமிடுவது உறுதியாகியுள்ளது.
டொனால்ட் லூ-வின் இந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக "இந்தியாவுடனான அமெரிக்க உறவு" குறித்த கூட்டம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகியது குறித்து அமெரிக்காவின் பிரதான கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனாலும், சீனாவுடனான தங்களது வல்லரசு போட்டிக்கு இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு என அமெரிக்கா நம்புவதால், இந்தியா மீது நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காது என நம்பப்படுகிறது.